மிருதுளா,பெ.சண்முகம் 
தமிழக செய்திகள்

பெண் தலைவர்களுக்கு எதிரான அவதூறு பிரசாரத்தை உடனடியாக நிறுத்துங்கள் - கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

கடந்த 10 தினங்களாக ஆணாதிக்க, சாதிய வன்மங்களுடன் மிருதுளா சமூக வலைதள பக்கங்களில் தாக்கப்பட்டு வருகிறார் என்று பெ.சண்முகம் தெரிவித்தார்.

சென்னை,

சமூக வலைதளங்களில் சி. மிருதுளாவை ஆபாசமாகவும், அச்சுறுத்தும் வகையிலும் பதிவிடுவோர்கள் மீது மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கண்டனம்

இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டக்குழு உறுப்பினருமான சி. மிருதுளா சமூக வலைதளத்தில் அளித்த பேட்டியை குறிப்பிட்டு அவரை இழிவு செய்யும் மற்றும் அச்சுறுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருவதை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வன்மையாக கண்டிக்கிறது.

இழிசெயலாகும்

கடந்த 10 தினங்களாக ஆணாதிக்க, சாதிய வன்மங்களுடன் சி. மிருதுளா சமூக வலைதள பக்கங்களில் தாக்கப்பட்டு வருகிறார். இது கருத்துரிமை மற்றும் போராட்ட நடவடிக்கையை ஒடுக்கும் பிற்போக்கு கருத்தியலை நோக்கமாக கொண்ட இழிசெயலாகும்.

ஆபாச சித்தரிப்பு

எனவே, உடனடியாக தமிழ்நாடு காவல்துறை தலையீடு செய்வது அவசியம். சமூக வலைதளங்களில் தனிநபர்கள் மீதும், சி. மிருதுளா போன்ற மாநில தலைவர் பொறுப்புகளில் உள்ள பெண்கள் மீதும் நடைபெறும் ஆபாச சித்தரிப்புகளையும், வன்மம் கொண்ட வார்த்தைகளையும் பதிவு செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் மாநில செயற்குழு தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT