தமிழக செய்திகள்

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவிப்பு

தங்கள் தேவைக்கான மாற்று ஏற்பாடுகளை செய்துகொள்ளுமாறு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வலியுறுத்தி உள்ளது.

சென்னை,

ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக எரிவாயு தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளதால், வீட்டு பயன்பாட்டு சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், சமையல் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க ஒரு சிலிண்டர் வைத்துள்ள குடும்பங்கள், முன்பதிவு செய்வதற்கான கால இடை வெளி 21 நாட்கள் என்று சமீபத்தில் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அதை 25 நாட்கள் என்று மத்திய அரசு தற்போது உயர்த்தி உள்ளது.

இதுபற்றி மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், “இந்தியாவில், ஒரு குடும்பம் ஓராண்டுக்கு சராசரியாக7 அல்லது 8 சிலிண்டர்களை பயன்படுத்துகிறது. அதாவது, 6 வாரங்களுக்கு முன்பாக அடுத்த சிலிண்டர் வாங்கத் தேவையில்லை. எண்ணெய் நிறுவனங்களிடம் போதிய சமையல் கியாஸ் கையிருப்பு உள்ளது. இருப்பினும், சமையல் கியாஸ் சிலிண்டர்கள் பதுக்கப்படுவதையும், செயற்கையான தட்டுப்பாடு உருவாக்கப்படுவதையும் தடுக்க சமையல் கியாஸ் முன்பதிவு கால இடைவெளி அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தடையற்ற வினியோகத்துக்காக, சமையல் கியாஸ் உற்பத்தியை அதிகரிக்குமாறு சுத்திகரிப்பு நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளோம்.

சிலிண்டர் விநியோகத்தில் வீட்டு உபயோகத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இறக்குமதி செய்யப்படும் எரிவாயுவை மருத்துவம், கல்வி போன்றவற்றுக்கு மட்டுமே வழங்க வேண்டும். ஹோட்டல் உள்ளிட்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் வழங்குவதற்கான வழிமுறை குறித்து ஆய்வுசெய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தது.

இந்த சூழலில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஓட்டல் சேவைகள் பெருமளவில் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல முன்னணி ஓட்டல்களும் இன்று ஒரு நாளைக்கு மட்டுமே கையிருப்பு உள்ளதால், உடனடியாக விநியோகம் சீரடையாவிட்டால், இன்றுடன் கடையை மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என அச்சம் தெரிவித்துள்ளனர்.

பல டீலர்களும் நேற்று முதலே உணவகங்களுக்கான விநியோகத்தை நிறுத்திவிட்டதாக ஓட்டல் உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மோடி மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை ஓட்டல்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக கர்நாடகாவில் ஏற்கனவே இன்று ஓட்டல்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சென்னையில் வணிக சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. வளைகுடா போரால் உலக அளவில் கியாஸ் சிலிண்டர் விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கியாஸ் சிலிண்டர் விநியோகத்தில் முன்னேற்றம் ஏற்படுமா என்பதை கண்காணித்து வருவதாகவும், தங்கள் தேவைக்கான மாற்று ஏற்பாடுகளை அனைவரும் செய்து கொள்ளுமாறும் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அறிவுறுத்தி உள்ளது.