சென்னை,
புயல் காரணமாக சூறைக்காற்று வீசுவதால், 9 துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. இது மேலும் வலுப்பெற்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புயலாக நாளை (திங்கட்கிழமை) உருவாகிறது.
இந்த புயல் தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆந்திர கடலோரப் பகுதிக்கு அருகில் 28-ந்தேதி (புதன்கிழமை) காலை கரையை கடக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் புயல் காரணமாக சூறைக்காற்று வீசி வருவதால், 9 துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதன்படி சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், தூத்துக்குடி, பாம்பன், புதுச்சேரி, நாகை, காரைக்கால் ஆகிய 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
பொதுவாக புயல் காலங்களில் 1 முதல் 11 வரை புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படும். பகல் நேரங்களில் மூங்கில் தட்டைகளால் ஆன கூண்டுகள் ஏற்றப்படுவது வழக்கம். இரவு நேரங்களில் வண்ண ஒளி விளக்குகளால் ஆன புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றுவார்கள்.
ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், புயல் உருவாகக் கூடிய வானிலை சூழல் ஏற்பட்டுள்ளதாக அர்த்தம். துறைமுகங்கள் பாதிக்கப்படாமல், பலமாக காற்று வீசும் என்றும் பொருள் ஆகும்.