சென்னை,
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் அண்ணா நகர் மண்டலத்தில், ஜவஹர்லால் நேரு சாலை, அம்பத்தூர் மண்டலத்தில் கொரட்டூர் கிழக்கு, வடக்கு நிழற்சாலை மற்றும் மாதவரம் செங்குன்றம் பிரதான சாலை உள்ளிட்ட இடங்களில் வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரூ.56.73 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை இன்று (14.06.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைக்காலங்களில் பெருமளவு மழை சேதாரங்களை தவிர்க்கும் வகையில், பொது மக்கள் வசிக்கும் பகுதிகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் பல்வேறு வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாநகராட்சி மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட ஜவஹர்லால் நேரு சாலை முதல் பாடி பாலம் வரை 480 மீட்டர் நீளத்திற்கு ரூபாய் 8.85 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையாளர் பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், அம்பத்தூர் மண்டலத்தில், கொரட்டூர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும் இப்பகுதியில் மழைநீர் தேங்காமல் தடுப்பதற்கு கொரட்டூர் கிழக்கு நிழற்சாலை முதல் சி.டி.எச் சாலை மற்றும் 200 அடி சாலை வழியாக ஓட்டேரி நல்லா பிரதான கால்வாயில் இணைக்கும் வகையில் 2.60 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூபாய் 25 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை கிழக்கு நிழற்சாலையில், பார்வையிட்ட ஆணையாளர் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே இப்பணிகள் அனைத்தையும் முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, கொரட்டூர் வடக்கு நிழற்சாலை மற்றும் கொரட்டூர் ஏரி உபரி நீர் செல்லும் கால்வாய் பகுதிகளில் ஆம்பிபியன் இயந்திரம் மூலம் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர் தூர் வாரும் பணிகளை விரைந்து முடித்து கரைகளை பலப்படுத்தி, கொரட்டூர் ஏரி மதகு பகுதியில் அடைப்பு ஏற்படாதவாறு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
பின்னர், கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகில் அமைக்கப்பட்டுள்ள 20 HP மோட்டார் திறன் கொண்ட மழைநீர் வெளியேற்றும் உந்து நிலையத்தினை பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர், மழைக் காலங்களில் மழை நீர் வெளியேற்றப்படும் செயல்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, மாதவரம் மண்டலத்தில் ரெட்டேரி வடக்கு உபரிகால்வாய்லிருந்து வெளியேற்றப்படும் 17 கன மீட்டர் அளவிலான மழைநீர், நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால் வழிப்பாதையில் மழைநீர் வெளியேற்றத்தைக் கொண்டு செல்லப் போதுமானதாக இல்லததால் மாதவரம் செங்குன்றம் பிரதான சாலையின் இடதுபுறத்தில் ரூபாய் 22.88 கோடி மதிப்பீட்டில், 1,450 மீ நீளத்திற்கு, 2 மீx2 மீ, அளவில் மாதவரம் செங்குன்றம் பிரதான சாலை, பாலாஜி நகர், கிருஷ்ணா நகர் ஆகிய பகுதிகளின் வழியாக வி.எஸ் மணிநகர் பகுதியிலிருந்து புழல் உபரி நீர் கால்வாயில் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் பணிகளை வடப்பெரும்பாக்கம் திருப்பதி தேவஸ்தான நகர் அருகில் உள்ள புழல் உபரி நீர் கால்வாய் பகுதியில் பார்வையிட்ட ஆணையாளர் பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, மேற்பார்வைப் பொறியாளர் சுந்தரராஜன், மண்டல அலுவலர்கள் பிரபாகரன், செந்தில்குமரன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.