சென்னை,
எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் எம்.கே. பைஸி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதிய வாக்காளர் சேர்க்கைக்கான இணையவழி 'படிவம் 6'-இல் (Form 6), பெற்றோரின் எல்.ஐ.ஆர் (சிறப்பு தீவிர திருத்தப் பட்டியல்) விவரங்களைக் குறிப்பிடுவதைக் கட்டாயமாக்கியுள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் முடிவை எஸ்டிபிஐ கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
இந்த நிபந்தனைக்கு இந்திய அரசியலமைப்பிலோ அல்லது 1950 ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திலோ எந்தவித அடிப்படையுமில்லை. தேவையான சட்டத் திருத்தங்கள் ஏதுமின்றி இம்முடிவு தன்னிச்சையாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
வாக்களிக்கும் உரிமை என்பது ஒருவரின் குடியுரிமை, வயது மற்றும் வசிப்பிடம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட ஓர் அரசியலமைப்பு உரிமையாகும். அது ஒருவருடைய பெற்றோரின் தேர்தல் வரலாற்றுடன் தொடர்புடையது அல்ல.
தற்போது நடைமுறையில் உள்ள 'சிறப்பு தீவிர திருத்தப் பட்டியல்' (SIR) நடவடிக்கையின் காரணமாக, ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இருந்து ஏராளமான பெயர்கள் நீக்கப்பட்டு, தகுதியான வாக்காளர்கள் புறக்கணிக்கப்படுவது குறித்து நாடு முழுவதும் கடுமையான கவலைகள் எழுந்துள்ளன. இத்தகைய சூழலில், இந்த புதிய நிபந்தனையானது முதன்முறை வாக்காளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் விளிம்புநிலை சமூகத்தினருக்கு மேலும் ஒரு பெரும் சுமையாக மாறும்.
சிறப்பு தீவிர திருத்தம் (SIR), குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும் கொண்டுவரப்பட உள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஆகியவற்றைச் சுற்றி நிலவும் சர்ச்சைகளின் பின்னணியில், தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை, அனைவருக்கும் பொதுவான வாக்குரிமைக்கு புதிய முட்டுக்கட்டைகளை உருவாக்குமோ என்ற கடுமையான அச்சத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, சட்டவிரோதமான மற்றும் பாகுபாடான இந்த நிபந்தனையை தேர்தல் ஆணையம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அத்துடன், சுதந்திரமான, நியாயமான மற்றும் உள்ளடக்கிய தேர்தல்களை உறுதி செய்ய வேண்டிய தனது அரசியலமைப்பு சட்ட கடமையை நிலைநிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.