தமிழக செய்திகள்

கோவையில் சிறுமி கடத்தப்பட்டு கொடூர கொலை: எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம்

நீதி கிடைக்கும் வரை எஸ்டிபிஐ கட்சி துணை நிற்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று முகம்மது முபாரக் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. மனிதநேயமுள்ள எவராலும் சகித்துக்கொள்ள முடியாத இந்த கொடூர சம்பவத்திற்கு மிக கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக சட்டங்கள் எவ்வளவுதான் கடுமையாக்கப்பட்டாலும், குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பதில் ஏற்படும் காலதாமதமும், சட்ட சலுகைகளும் குற்றப்பின்னணி கொண்டவர்களுக்கு பெருந்துணிச்சலை ஏற்படுத்தி, இதுபோன்ற கொடூரங்கள் தொடர்கதை ஆக காரணமாகின்றன.

வெறும் சட்ட புத்தகங்களால் மட்டும் குற்றங்களை தடுத்துவிட முடியாது; சமரசமற்ற கடும் நடவடிக்கையும், காலதாமதமற்ற விரைவான புலனாய்வும், உறுதியான அதிரடித் தண்டனையுமே இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான குற்றங்களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

அண்டை வீட்டை சேர்ந்த, தெரிந்த நபர்களே இந்த கொடூரத்தை அரங்கேற்றியிருப்பது, நம் சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு எவ்வளவு பெரிய பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என்பதை உணர்த்துகிறது. பெண்களுக்கும், பிஞ்சு பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற ஒரு மாநிலமாக தமிழகம் மாறிவருவது மிகுந்த அச்சத்தையும் வேதனையையும் அளிக்கிறது.

எனவே, தமிழக அரசும், காவல்துறையும், நீதித்துறையும் இணைந்து இவ்விவகாரத்தில் உடனடியாகவும் உறுதியாகவும் தலையிட வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன்.

கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, வழக்கை விரைவு நீதிமன்றம் மூலம் விசாரிப்பதோடு, எவ்வித சலுகையும் இன்றி, மற்றவர்களுக்கு பாடமாய் அமையும் வகையில் மிக கடுமையான தண்டனை விரைவாக பெற்றுத்தரப்பட வேண்டும்.

மேலும், தமிழகம் முழுவதும் உள்ள குடியிருப்பு பகுதிகள், பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய உறுதியான பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

வெற்று வார்த்தைகளால் ஆறுதல் கூறுவதை நிறுத்திவிட்டு, இனி ஒரு பெண் குழந்தைக்குக்கூட இத்தகைய கொடூரம் நிகழ கூடாது என்கிற அடிப்படையில் தமிழக அரசும், நீதித்துறையும் போர்க்கால அடிப்படையில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை எஸ்டிபிஐ கட்சி துணை நிற்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.