சென்னை,
தமிழகத்தில் பள்ளிவாசல்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்தும், மதவெறியால் தூண்டப்பட்டு வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா எஸ்டிபிஐ சார்பில் சென்னை வடபழனியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எஸ்டிபிஐ தென் சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தென் சென்னை வடக்கு மாவட்டத் தலைவர் அப்துல் ரஸாக் தலைமை தாங்கினார். மாவட்டத் துணைத் தலைவர் முஹம்மது சலீம் வரவேற்புரையாற்றினார். மண்டல மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
எஸ்டிபிஐ மாநிலச் செயற்குழு உறுப்பினரும் மண்டலச் செயலாளருமான அஸ்கர் அலி, கண்டன ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து தொடக்கவுரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, எஸ்டிபிஐ மாநிலச் செயலாளரும் தென் மண்டலத் தலைவருமான ஹமீத் பிரோஸ் கண்டன உரையாற்றினார். எஸ்டிபிஐ மாநிலப் பொதுச் செயலாளர் கரீம், சிறப்புக் கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் பள்ளிவாசல்கள் மற்றும் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை முறையாக விசாரித்து, குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது பாரபட்சமின்றிக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்தினர்.
மேலும், மத நல்லிணக்கத்தையும் சமூக அமைதியையும் சீர்குலைக்கும் வகையிலான வன்முறைச் சம்பவங்களைத் தடுக்க தமிழக அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஏராளமான பொதுமக்கள், பள்ளிவாசல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். இறுதியாக, எஸ்டிபிஐ மயிலாப்பூர் தொகுதித் தலைவர் முஹம்மது இப்ராஹிம் நன்றியுரையாற்றினார். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.