தமிழக செய்திகள்

ஆபாச வீடியோ இருப்பதாக மர்ம நபர் மிரட்டல்: இளம்பெண் தற்கொலை

இதனால் அதிர்ச்சியடைந்த ரட்சிதா, இதுகுறித்து தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.

விருகம்பாக்கம்,

ஆபாச வீடியோ இருப்பதாக மர்ம நபர் மிரட்டிய நிலையில், அதிர்ச்சியடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

மர்ம நபர்

சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமம், மதியழகன் நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 30). தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரட்சிதா (27). நேற்று முன்தினம் ரட்சிதாவை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர். "தன்னிடம் உனது ஆபாச வீடியோ இருப்பதாகவும். அதனை உனது கணவருக்கு அனுப்பிவிடுவதாகவும் கூறி மிரட்டியதாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த ரட்சிதா, இதுகுறித்து தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். ரவிச்சந்திரன் தனது மனைவியிடம் கவலைப்பட வேண்டாம் என கூறிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ரவிச்சந்திரன் தனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டபோது, அவர் அழைப்பை எடுக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த ரவிச்சந்திரன், வீட்டின் உரிமையாளரை தொடர்பு கொண்டு வீட்டுக்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். அவர் சென்று பார்த்தபோது. வீட்டின் கதவு உள்பக்கமாக சாத்தப்பட்டிருந்தது. நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவர். கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது ரட்சிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

போலீசார்

இந்த சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரட்சிதாவை செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாச வீடியோ இருப்பதாக மிரட்டிய மர்ம நபர் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.