தமிழக செய்திகள்

வாலிபரின் உயிரை காவு வாங்கிய தெருநாய்... உரிய சிகிச்சை பெறாததால் விபரீதம்

ஆகாசின் நடவடிக்கைகள் கடந்த 2 நாட்களாக வித்தியாசமாக இருந்ததை வீட்டில் இருந்தவர்கள் கவனித்துள்ளனர்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள முடிகொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருடைய மனைவி அமுதா. இவர்களுடைய மகன் ஆகாஷ்(வயது 22). ஜெயக்குமார் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். ஆகாஷ் கூலி வேலை செய்து வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய், ஆகாஷ் காலில் கடித்தது.

இதையடுத்து அவர் அருகில் உள்ள பூந்தோட்டம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊசி போட்டுவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். அதன் பிறகு நாய் கடிக்கு உரிய எந்த சிகிச்சையையும் முறைப்படி பெறவில்லை. நாய் கடித்ததை அலட்சியமாக கருதி அதுபற்றி வீட்டிலும் எதுவும் சொல்லவில்லை.

இந்த நிலையில் ஆகாசின் நடவடிக்கைகள் கடந்த 2 நாட்களாக வித்தியாசமாக இருந்ததை வீட்டில் இருந்தவர்கள் கவனித்துள்ளனர். அவர் நாய் போல் கத்துவது, ஓடிப்போய் சுருண்டு கீழே படுத்துக் கொள்வது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதைப்பார்த்து பதறிப்போன ஆகாஷின் தாய் மற்றும் சகோதரர்கள் உடனடியாக அவரை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை செய்தபோது நாய் கடியால் ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து டாக்டர்கள் ஆகாசுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

அவருடைய உடலை சுகாதாரத்துறையினர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்காமல் தென்குடி அருகே உள்ள மயானத்தில் அடக்கம் செய்தனர். அப்போது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உள்பட கிராம மக்கள் அங்கு திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தெரு நாய் ஒன்று வாலிபரின் உயிரையே காவு வாங்கிய சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

SCROLL FOR NEXT