மெட்ரோ ரெயில் 
தமிழக செய்திகள்

மகாபிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா?: பல அடுக்கு பாதுகாப்பை தாண்டி மெட்ரோ ரெயிலில் பயணித்த தெருநாய்!

பெண்கள் பெட்டிக்குள் நுழைந்ததை கண்டு பயணிகள் முதலில் அதிர்ச்சியடைந்தாலும், அந்த நாய் அமைதியாக பயணித்தது.

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயிலில் பயணித்த தெரு நாய் ஒன்றை, மெட்ரோ ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து பத்திரமாக மீட்டு வெளியேற்றினர். அண்ணா நகர் டவர் நிலையத்தில் இருந்து கோயம்பேடு வரை ரெயிலின் பெண்கள் பெட்டியில் இந்த நாய் பயணித்த சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நிலையத்திற்குள் நுழைந்த நாய்

வியாழக்கிழமை மாலை சுமார் 7:30 மணியளவில், சென்னை அண்ணா நகர் டவர் மெட்ரோ நிலையத்தின் வெளியேறும் படிக்கட்டுகள் வழியாக தெரு நாய் ஒன்று எதிர்பாராதவிதமாக உள்ளே நுழைந்துள்ளது.

பெண்கள் பெட்டிக்குள் நாய்

டிக்கெட் பரிசோதனை கேட்களை தாண்டி பிளாட்பாரத்திற்கு ஓடிய நாயை பாதுகாப்பு ஊழியர்கள் பிடிக்க முயன்றனர்; ஆனால், சரியாக அதே நேரத்தில் பிளாட்பாரத்தில் வந்து நின்ற மெட்ரோ ரெயிலின் பெண்கள் பெட்டிக்குள் நாய் தாவி ஏறியது.

அமைதியாக பயணித்த நாய்

பெண்கள் பெட்டிக்குள் நாய் நுழைந்ததை கண்டு பயணிகள் முதலில் அதிர்ச்சியடைந்தாலும், அந்த நாய் யாருக்கும் எவ்வித இடையூறும் செய்யாமல் அமைதியாக பயணித்தது. அடுத்ததாக வந்த திருமங்கலம் நிலையம் பாதாள சுரங்க நிலையம் என்பதால், அங்கு நாயை இறக்குவது சிரமம் என கருதிய மெட்ரோ ஊழியர்கள், அதனுடனேயே பயணித்து உயர்மட்ட நிலையமான கோயம்பேடு வரை காத்திருந்தனர்.

பத்திரமாக மீட்பு

ரெயில் கோயம்பேடு நிலையத்தை அடைந்ததும் மெட்ரோ ஊழியர்கள் நாயை பத்திரமாக கீழே இறக்கினர்.ஏற்கனவே அளிக்கப்பட்ட தகவலின் பேரில் அங்கு தயாராக இருந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், அந்த நாயை மெட்ரோ நிலையத்திலிருந்து பாதுகாப்பாக வெளியே அழைத்து சென்றனர்.

SCROLL FOR NEXT