தென்காசி,
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள மேக்கரை பகுதியில், விவசாயிகள் அளித்த புகாரின் பேரில், மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து வரும் இயற்கை நீரோடைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த தடுப்பணைகள் மற்றும் தனியார் நீர்வீழ்ச்சிகளை அதிகாரிகள் ஜே.சி.பி. இயந்திரங்கள் கொண்டு இடித்து தள்ளினர்.
மேக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இருந்து விளைநிலங்களுக்கு வரும் முக்கிய நீர் ஆதாரங்களான இயற்கை ஓடைகளை ஆக்கிரமித்து, சிலர் தங்களின் சுயலாபத்திற்காக தடுப்பணைகளையும், செயற்கையான தனியார் நீர்வீழ்ச்சிகளையும் கட்டியுள்ளனர். இதனால் விவசாயத்திற்கு செல்ல வேண்டிய தண்ணீர் முற்றிலும் பாதிக்கப்பட்டு, பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பகுதி விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடமும், சம்பந்தப்பட்ட துறையினரிடமும் தொடர் புகார்களை அளித்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற வருவாய்த்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு நீர்நிலைகளை வழிமறித்து கட்டப்பட்டிருந்த கான்கிரீட் தடுப்பணைகள் மற்றும் தனியார் நீர்வீழ்ச்சி அமைப்புகளை ஜே.சி.பி. இயந்திரங்களின் உதவியோடு அதிகாரிகள் உடைத்து தரைமட்டமாக்கினர்.
இயற்கை நீரோடைகளை மீட்டெடுத்த அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு அந்த பகுதி விவசாயிகள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.