தாம்பரம்,
தாம்பரம் மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
தாம்பரம் மாநகரக் காவல் ஆணையர் சஞ்சய் குமாரின் உத்தரவின் பேரில், போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத மது விற்பனை மற்றும் திட்டமிட்ட சைபர் மோசடிகளை ஒழிப்பதற்காக தாம்பரம் மாநகரக் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியான தீவிர சிறப்புச் சோதனைகள் மற்றும் அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, 14.05.2026 மற்றும் 15.05.2026 ஆகிய தேதிகளில் தாம்பரம் மாநகரக் காவல் எல்லைக்குட்பட்ட பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனைகளில், 21 கிலோ கஞ்சா மற்றும் 1,900 "டாபென்டாடோல்" (Tapentadol) மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பல குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இந்த சோதனைகள் செம்மஞ்சேரி காவல் நிலையம், கூடுவாஞ்சேரி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் குன்றத்தூர் காவல் நிலையக் குழுக்களால் ரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன.
தாம்பரம் மாநகரம் போதைப்பொருள் இல்லாத மற்றும் சட்டத்தை மதிக்கும் சமூகமாக இருப்பதை உறுதி செய்வதில் காவல் துறை உறுதியாக உள்ளது என காவல் ஆணையர் தெரிவித்தார். மேலும், பின்வரும் சட்டவிரோதச் செயல்களுக்கு எதிராகத் தீவிர கண்காணிப்பு மற்றும் திடீர் சோதனைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் அவர் உத்தரவிட்டார்:
கஞ்சா மற்றும் இதர போதைப்பொருட்களைச் சட்டவிரோதமாக விற்பனை செய்தல் மற்றும் கடத்துதல்.
அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி மதுபானக் கூடங்களில் மது அருந்துதல்.
பொது இடங்களிலும் மதுபானக் கூடங்களின் முன்பும் மது அருந்துதல்.
சட்டத்திற்குப் புறம்பாக சில்லறையாக மது விற்பனை செய்தல்.
மதுபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் செயல்கள்.
இத்தகைய சட்டவிரோதச் செயல்கள் எக்காரணம் கொண்டும் பொறுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்றும், குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
சைபர் குற்ற நடவடிக்கை:
புதிய பெருங்களத்தூரைச் சேர்ந்த ஒருவரிடம் காப்பீட்டு முகவர்கள் போல் நடித்து 15 லட்சம் ரூபாய்க்கும் மேல் மோசடி செய்ததாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் பிரிவு வழக்குப் பதிவு செய்து, காவல் ஆணையரின் அறிவுறுத்தலின்படி, 1)தயாள் மற்றும் 2) டில்லி பாபு ஆய்வாளர்களின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
விசாரணையில், கிண்டியில் உள்ள ஆர்.கே. டவர்ஸில் (RK Towers) இயங்கி வந்த ஒரு தனியார் அலுவலகத்திலிருந்து இந்த மோசடி நடைபெறுவது செல்போன் பதிவுகள் மூலம் கண்டறியப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட சோதனையில், மோசடியில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து செல்போன்கள், கணினிகள், மடிக்கணினிகள் மற்றும் பல சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பொதுமக்கள் போலியான காப்பீட்டு அழைப்புகளை நம்ப வேண்டாம் என்றும், முதலீடு செய்வதற்கு முன் நிறுவனத்தின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்குமாறும் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் சஞ்சய் குமார் அறிவுறுத்தினார். மேலும், வேலை தேடும் இளைஞர்கள், குறிப்பாகப் பெண்கள், ஒரு நிறுவனத்தில் பணியில் சேருவதற்கு முன் அந்த நிறுவனத்தின் உண்மைத்தன்மையைச் சரியாகச் சரிபார்க்க வேண்டும் என்றும் எச்சரித்தார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.