சென்னை,
ஈரோடு மற்றும் மொடக்குறிச்சியில் 4 இடங்களில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் சிலைகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
ஈரோடு மற்றும் மொடக்குறிச்சியில் 4 இடங்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர், திராவிட இயக்கத்தின் முன்னோடி தலைவர்களில் ஒருவராவார். அரசியல் ,ஆட்சி நிர்வாகம், திரைத்துறை, கலை - இலக்கியம் ஆகியத் துறைகளில் சிறப்பாக செயல்பட்டவராவார். தனது பேச்சாற்றல், எழுத்தாற்றலால் மக்களின் உள்ளங்களில் இடம் பெற்ற மதிப்பிற்குரிய தலைவராவார். சமூக நீதியையும், இட ஒதுக்கீட்டையும், சமூக சமத்துவத்தையும் நடைமுறைபடுத்திட வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவராவார்.
அவரது சிலைகளை சமூக விரோத சக்திகள் சேதப்படுத்தியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. இச்செயலை செய்தவர்களை கைது செய்து அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்திட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.