ஸ்ரீரங்கம்,
சிவன் சொத்து குலநாசம் என்றால், பெருமாள் சொத்துகளை தி.மு.க.வினருக்கும், கட்சி அலுவலகம் நடத்தவும் விட்டுக் கொடுக்கலாமா? என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் ரமேஷ் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் அருகில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் பல இடங்களில் தி.மு.க.வினர் கோவில் நிலங்கள், சொத்துக்களை அபகரித்துள்ளனர். இதுதொடர்பான ஆதாரங்கள் தற்போது கிடைத்து வருகிறது.
அந்த வகையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலம் போலி ஆவணம் மூலம் முறைகேடாக பதிவு செய்யப்பட்டு மோசடி நடந்து இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சொந்தமாக கடந்த 1866-ம் ஆண்டு 329 ஏக்கர் நிலங்கள் உள்ளதாக ஆவணங்கள் உள்ளன. மேலும், 1910 மற்றும் 1930-ம் ஆண்டு பதிவேடுகளிலும் இவை கோவில் சொத்துக்களாகவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
ஸ்ரீரங்கம் தி.மு.க. பகுதி செயலாளர் ராம்குமார் என்பவர் முறையான மூலப்பத்திரங்கள் ஏதுமின்றி, போலி ஆவணங்களை தயாரித்து கோவில் நிலத்தை தன் பெயருக்கு மாற்றி அங்கு கட்சி அலுவலகம் நடத்தி வந்து உள்ளார். முறைகேடு செய்யப்பட்டுள்ள இந்த நிலத்தின் இன்றைய சந்தை மதிப்பு சுமார் ரூ.50 கோடி ஆகும்.
இதுதொடர்பாக கிடைக்கப்பெற்றுள்ள உறுதியான ஆதாரங்களின் அடிப்படையில், ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மூலம் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, தற்போது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.
மோசடியில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக முதல்-அமைச்சர் விஜய் கோவில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என்பதில் மிகத்தெளிவாக உள்ளார்.
சட்டசபையில் சிவன் சொத்து குலநாசம் என்று வாய் கிழிய முன்னாள் அமைச்சர் சேகர்பாபு பேசுகிறார். சிவன் சொத்து குலநாசம் என்றால், பெருமாள் சொத்தை தி.மு.க.வினருக்கு, தி.மு.க.வினர் கட்சி அலுவலகம் நடத்த விட்டுக் கொடுக்கலாமா?
ஸ்ரீரங்கம் பகுதி மக்களிடம் இருந்து எனக்கு வந்த புகாரின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல, தமிழகம் முழுவதும் கோவில் நிலங்களை ஆக்கிமித்துள்ள தி.மு.க.வினர் மீது பொதுமக்கள் தைரியமாக புகார் கொடுக்கலாம். அவர்களிடம் இருந்து நிச்சயம் கோவில் சொத்துகள் மீட்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, அமைச்சர் ரமேஷ் போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டு தி.மு.க. அலுவலகம் செயல்படுவதாக கூறி ஆதாரங்களை நிருபர்களிடம் காட்டினார்.