தூத்துக்குடி,
கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று காரணமாக தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 272 விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி கடற்பகுதியில் வீசி வரும் பலத்த சூறாவளி காற்று காரணமாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் 272 விசைப்படகுகளும் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் நடைமுறைப்படுத்தப்படும் மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 15-ம் தேதி முதல் தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் சென்று வந்தனர். தற்போது மீன்பாடு அதிகமாக இருந்ததால் விசைப்படகு உரிமையாளர்களும் மீனவர்களும் தொழில் ரீதியாக சாதகமான சூழலில் இருந்து வந்தனர். தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து தினசரி காலை 5 மணிக்கு 272 விசைப்படகுகளில் கடலுக்குப் புறப்படும் மீனவர்கள், இரவு 9 மணிக்கு கரை திரும்புவது வழக்கமாக இருந்தது.
இந்த நிலையில், நேற்று (ஜூன் 29) முதல் கடலில் காற்றின் வேகம் கணிசமாக அதிகரித்தது. கடல் சீற்றத்தினால் விசைப்படகுகளைச் செலுத்துவதிலும், மீன்பிடிப்பதிலும் மீனவர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இதுகுறித்து மீனவர்கள் விசைப்படகு உரிமையாளர்களுக்கு தகவல் அளித்தனர்.
இதனை தொடர்ந்து விசைப்படகு உரிமையாளர்கள் அவசரக் கூட்டம் ஒன்றை நடத்தினர். கடலில் தற்போது மணிக்கு 60 கிலோமீட்டர் முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசுவதால், பாதுகாப்பு கருதி இன்று (ஜூன் 30) கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதன் காரணமாக மீனவர்கள் இன்று தொழிலுக்கு செல்லாததால், அவர்களின் வாழ்வாதாரம் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.