தமிழக செய்திகள்

வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம் தகவல்

காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

சென்னை,

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது புயலாக வலுவடைந்து, ஆந்திரா-ஒடிசா கடற்கரைப் பகுதிகளை நோக்கி நகரும் என்றும், தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை

குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென் தமிழக பகுதிகள் மற்றும் கேரள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்போது தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவி வருகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து காணப்படுகிறது.

இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக தென்கிழக்கு மற்றும் அதனையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நேற்று காலை மத்திய கிழக்கு மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியது. இது இன்று (சனிக்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்

இந்நிலையில் வங்கக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை 5:30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுப்பெற்றது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டு உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; அதே பகுதியில் நீடித்து, இன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது என்றும், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (அக்.25) வலுப்பெற்று அக்.26 புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மிக கனமழை

இதனிடையே இன்று (24-10-2026): திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், கோயம்புத்தூர், நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தென்காசி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிவகங்கை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.

SCROLL FOR NEXT