சென்னை,
விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு குழந்தைகளுக்கு முதன்முதலில் கல்வி மற்றும் எழுத்துக்களை அறிமுகப்படுத்தும் ‘வித்யாரம்பம்’ எனப்படும் ஏடு தொடங்குதல் நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் விஜயதசமி பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி நன்னாளில் குழந்தைகளுக்கு கல்வி கற்பித்தலை தொடங்குவது மரபாக கருதப்படுகிறது.
அந்தவகையில் இன்று அரசு விடுமுறை தினமாக இருப்பினும் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்காக அரசு பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்து இருந்தது. அதன்படி, இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அங்கன்வாடி மையங்களிலும் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. அங்கன்வாடி மையத்தில் அரிசி பரப்பி அதில் அ என்ற முதல் தமிழ் எழுத்தை எழுதி கல்வி பருவத்தை குழந்தைகள் தொடங்கினர்.
அதேபோல விஜயதசமி பண்டிகையையொட்டி மும்மூர்திகள் ஸ்தலமான திருச்சி அருகே உள்ள உத்தமர் கோவிலில் சரஸ்வதி தேதி சன்னதியில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு நெல் மணிகளில் எழுத கற்றுக்கொடுத்து சரவஸ்வதி தேவியை வழிபட்டனர்.
இங்குள்ள சன்னதியில் சரஸ்வதி கையில் ஓலை சுவடிகளை கொண்டு அருள் பாலிப்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து அவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுத்து வழிபாடு செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் உள்ள பிரசித்தி பெற்ற சரஸ்வதி கோவிலில், விஜய தசமியை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நெல் மணிகளில் ‘அ’ எழுத்திட்டு எழுத்தறிவை குழந்தைகள் தொடங்கினர்.
விஜயதசமியை ஒட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் மாணவர் சேர்க்கை தொடங்கியது. அங்கன்வாடி மையத்தில் அரிசி பரப்பி அதில் அ என்ற முதல் தமிழ் எழுத்தை எழுதி கல்வி பருவத்தை குழந்தைகள் தொடங்கினர்.
நாகர்கோவிலில் குழந்தைகளுக்கு முதன்முதலில் கல்வி மற்றும் எழுத்துக்களை அறிமுகப்படுத்தும் ‘வித்யாரம்பம்’ எனப்படும் ஏடு தொடங்குதல் நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
மற்ற இடங்களை போலவே கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகைகள் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் நேற்று ஆயுதபூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், நாகர்கோவில் நாகராஜா கோயில், ஐயப்பன் கோயில் உள்ளிட்ட பல கோயில்களிலும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனால் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து கோயில்களிலும் இன்று காலையிலேயே கூட்டம் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருந்தது. மேலும், கேரளத்தில் இருந்தும் ஏராளமான பெற்றோர் தங்களது குழந்தைகளை குமரி மாவட்டத்திலுள்ள பல்வேறு கோவில்களுக்கு அழைத்து வந்திருந்தனர். கேரளத்தில் நாளை அக்டோபர் 21 வித்யாம்பரம் நிகழ்ச்சி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் சோழன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை காலையில் ஹயக்கிரீவர் ஹோமம், கணபதி ஹோமம், சரஸ்வதி ஹோமம் நடைபெற்றன. தொடர்ந்து புதிதாக பள்ளியில் சேர வந்திருந்த மாணவர்களின் கையைப் பிடித்து அரிசியில் பெயர் எழுதும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களை ஆசிரியைகள் அரிசியில் அ என்று எழுத்த வைத்தனர். பின்னர், மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. பள்ளி ஆசிரியைகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.