கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

நீட் மறுதேர்வு தோல்வி பயத்தில் மாணவர் தற்கொலை - 3 பக்க கடிதம் சிக்கியது

தோல்வி பயத்தில் 'நீட்' மறு தேர்வுக்கு படித்து வந்த மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் - பாகலூர் ரோடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி, தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி உத்தரகுமாரி. இவர்களுக்கு, ஜீவானந்தம், வெற்றியானந்தம் என்ற 2 மகன்கள் இருந்தனர். இவர்களில் ஜீவானந்தம், கோவையில் தங்கி அரசு போட்டி தேர்வுக்கு படித்து வருகிறார்.

2-வது மகன் வெற்றியானந்தம் (20 வயது) பிளஸ்-2 முடித்து விட்டு கடந்த 3 ஆண்டுகளாக வீட்டில் இருந்தே 'நீட்' தேர்வுக்கு படித்து வந்தார். இதில் கடந்த ஆண்டு வரை 2 தேர்வுகள் எழுதிய நிலையில் தோல்வி அடைந்திருந்தார். ஆனாலும் அவர், விடாமுயற்சியாக சமீபத்தில் நடந்த 'நீட்' தேர்வையும் எழுதி இருந்தார். அந்த தேர்வு ரத்தான நிலையில் மறுதேர்வுக்கும் அவர் தயாராகி வந்தார்.

இதனிடையே 'நீட்' மறுதேர்விலும் தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சம் அவரை கடந்த சில நாட்களாக வாட்டியது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டு உள்ளார். நேற்று முன்தினம் அவரது தந்தை வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார்.

பகலில் மாணவரின் தாயாரும் கடைக்கு சென்று விட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த மாணவர் வெற்றியானந்தம் வரவேற்பு அறையில் உள்ள மின்விசிறியில் தனது தாயின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன்பிறகு வீடு திரும்பிய அவரது தாயார், மகன் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறினார். இதுகுறித்து தகவல் அறிந்த ஓசூர் அட்கோ போலீசார் விரைந்து வந்து மாணவரின் உடலை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, தற்கொலைக்கு முன்பு மாணவர் வெற்றியானந்தம் ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்த 3 பக்க கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், 'இப்படியான பெற்றோர், சகோதரர் கிடைக்க நான் கொடுத்து வைத்தவன். 'நீட்' தேர்வு பயம் காரணமாக கடந்த ஒரு மாதமாக நான் சரியாக தூங்கவே இல்லை. இம்முறையும் தோல்வி அடைந்துவிடுவேன் என்கிற பயத்தில் தவறான முடிவை எடுப்பதாகவும், அம்மா, அப்பா, அண்ணா... என்னை மன்னித்து விடுங்கள். இந்த தற்கொலை முடிவுக்கு நானே காரணம். சாரி அப்பா, அம்மா, அண்ணா, நண்பர்கள்' என உருக்கமாக எழுதி இருந்தார்.

‘நீட்' தேர்வு மன அழுத்தத்தால் மாணவர் தற்கொலை செய்த சம்பவம் ஓசூர் பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.