தமிழக செய்திகள்

தண்ணீரில் தவறி விழுந்த மாணவன் பலி: காப்பாற்ற சென்ற தாயும் உயிரிழந்த சோகம்

அருகிலுள்ள மாந்தோட்டத்தில் மாம்பழம் சாப்பிட்ட பிறகு, அங்கிலுள்ள ஒரு குட்டையில் கைகளைக் கழுவச் சென்றான்.

ஸ்ரீகாளஹஸ்தி,

சித்தூர் மாவட்டம் ஸ்ரீரங்கராஜபுரம் மண்டலம் நெலவாய் கிராமத்தை சேர்ந்தவர் சோமசேகர். வெல்டராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி ரேவதி (வயது 35) கூலித்தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். இவர்களது மகன் சித்து (14) 10-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் வழக்கம் போல் ரேவதி, நெலவாய் கிராமத்தை சேர்ந்த ரகுபதிநாயுடு என்ற விவசாயின் வயலில் வேலைக்குச் சென்றார்.

அங்கு மகன் சித்து தாய் ரேவதிரயை பார்க்கச் சென்றுள்ளான். பின்னர் அருகிலுள்ள மாந்தோட்டத்தில் மாம்பழம் சாப்பிட்ட பிறகு, அங்கிலுள்ள ஒரு குட்டையில் கைகளைக் கழுவச் சென்றான். அப்போது அவன் கால் வழுக்கியதில் குட்டையில் தவறி விழுந்து விடடான். இதை கவனித்த தாய், தன் மகனைக் காப்பாற்றுவதற்காக ஓடிச் சென்று குட்டையில் இறங்கினார். அந்தக் குட்டை சுமார் 15 அடி ஆழம் இருந்ததால், அவர்கள் இருவரும் நீரில் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.

விசாரணை

கிராம மக்கள் அங்கு சென்று தாய் மற்றும் மகனின் உடல்களைக் கரைக்குக் கொண்டு வந்தனர். குடும்ப உறுப்பினர்களின் புகாரின் பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்காக சித்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக ஸ்ரீரங்கராஜபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுமன் கூறினார்.