சென்னை,
அரசு தொடக்கப் பள்ளிகளில், கடந்த ஆண்டை காட்டிலும், நடப்பாண்டு மாணவர் சேர்க்கை சற்று அதிகரித்துள்ளது.தமிழக பள்ளி கல்வித் துறையின் கீழ், 37,863 அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. அதில், 31,936 தொடக்கப் பள்ளிகள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை, கடந்த மார்ச் 1ம் தேதி தொடங்கியது. நடப்பு கல்வியாண்டில், 5 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில், அரசு தொடக்கப் பள்ளிகளில், கடந்த 28-ம் தேதி நிலவரப்படி, 4 லட்சத்து, 23,955 மாணவ, மாணவியர் புதிதாக சேர்ந்துள்ளனர். ஒன்றாம் வகுப்பில், 2 லட்சத்து 94,209 மழலையர் வகுப்பில் 41,231 பேர், இரண்டாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, 88,518 பேர் சேர்ந்துள்ளனர். கடந்த கல்வி ஆண்டில், 4.13 லட்சம் பேர் மட்டுமே சேர்ந்திருந்த நிலையில், இந்த கல்வியாண்டில் சேர்க்கை அதிகரித்துள்ளது.