தமிழக செய்திகள்

மாணவர் போராட்டங்களை தடுக்க முடியாது: சு.வெங்கடேசன் எம்.பி.

அறிவார்ந்த அரசியல் பார்வையும், தீர்க்கமான போராட்டமும் தான் விடுதலை போராட்டத்தை மேலும் தீவிரமாக்கியது.

சென்னை,

மாணவர்களைப் போராட்டங்களிலிருந்து விலக்கி வைக்கும் முயற்சிகளை எதிர்க்கும் இடதுசாரிக் கட்சிகளை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு.வெங்கடேசன், தமிழிசை சவுந்தரராஜனுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக, மதுரை நாடாளுமன்ற தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு.வெங்கடேசன் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

மாணவர் போராட்டம்

மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை, போராட்டம் தேவையில்லை என்ற கரடுதட்டிப் போன பழமைவாதத்தின் குரலைச் சுதந்திரப் போராட்ட காலத்திலேயே தூக்கி குப்பையில் வீசியவர்கள் நமது மாணவர்கள். அவர்களின் அறிவார்ந்த அரசியல் பார்வையும், தீர்க்கமான போராட்டமும் தான் விடுதலை போராட்டத்தை மேலும் தீவிரமாக்கியது.

மாணவர்களின் பகுத்தறிவு மற்றும் அறிவியல் மனப்பான்மையைச் சீர்குலைக்க நீங்கள் செய்யும் பட்டவர்த்தன முயற்சிதான் புதிய கல்விக் கொள்கை, நீட் உள்ளிட்ட கல்வித் துறையின் மோசடிகள் அனைத்தும். அதற்கு எதிராக இந்திய மாணவர்கள் துணிவோடு களத்தில் நிற்கிறார்கள்.

பெல்லட் குண்டுகளையும், ஆணி பொறுத்திய லத்திகளையும் துணிவோடு எதிர் கொண்டு அவர்கள் களத்தில் நின்றார்கள். ஆனால், மாணவர்களைத் தாக்க உத்தரவிட்டது யார் என்ற கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் உள்துறை அமைச்சர் 20 நாளாக நாடாளுமன்றத்திற்கே வரவில்லை. இந்த உண்மையை எதிர்கொள்ள முடியாமல் வெளிப்படுவதுதான் இன்றைய கதறல்கள் எல்லாம்.

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் நடத்திய சட்டம் ஒழுங்கு தொடர்பான கூட்டத்தின் முடிவுகளும், தமிழிசை செளந்தரராஜனின் எக்ஸ் தள பதிவும் ஒரே திசையில் மாணவர்களையும், இடது சாரிகளையும் குற்றம் சாட்டுகிறது. “திமாமி நக்சல்” என பிரதம பட்டம் சூட்டிய நபர்களின் பட்டியலைத் தயார் செய்ய துவங்குகிறீர்கள்.

சங்கமாகச் செயல்படும் மாணவர் உரிமையை சங்கிகள் கூட்டத்தால் தடுத்துவிட முடியாது. அறிவியல் மனப்பான்மை கொண்ட வகுப்பறைகளை மாட்டு மூத்திரத்தின் மேன்மையை விளக்கும் மேடையாக மாற்ற நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளையும் மாணவர்கள் வீழ்த்திக் காட்டுவார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.