தமிழக செய்திகள்

காதலை கைவிட மறுத்த மாணவி: தந்தை செய்த கொடூர செயல்

படிக்கும் காலத்தில் காதல் வேண்டாம் என மாணவிக்கு அவரது தந்தை அறிவுரை கூறியதாக தெரிகிறது.

வானூர்,

காதலை கைவிட மறுத்ததால் மாணவியை கழுத்தை நெரித்துக் தந்தையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாணவி

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வி.பரங்கனி கிராமத்தை சேர்ந்தவர் சிவசாஸ்திரி (வயது 40). லாரி டிரைவர். அவரது மனைவி விமலா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை அவரது 2-வது மகள் ராணிப்பேட்டை மாவட்டம் காரை கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார். அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது.

தந்தை கண்டிப்பு

இந்த விவகாரம் மாணவியின் பாட்டிக்கு தெரிய வந்தது. இதுகுறித்து அவர் தனது மகள் மற்றும் மருமகனிடம் தெரிவித்தார். இதையடுத்து சிவசாஸ்திரி தனது மகளை சொந்த ஊருக்கு அழைத்து வந்தார். இங்கு வந்ததும் நீ நன்றாக படிக்க வேண்டும், படிக்கும் காலத்தில் காதல் எல்லாம் வேண்டாம் என அறிவுரை கூறினார். மேலும் கரசானூரில் உள்ள பள்ளியில் மாணவியை 10-ம் வகுப்பு சேர்த்து விட்டார்.

இந்த நிலையில் இங்கு வந்த பின்னரும் மாணவி செல்போனில் அந்த வாலிபருடன் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த மாணவியின் தந்தை அவரை கண்டித்துள்ளார். இருப்பினும் அவர் கேட்கவில்லை.

துக்க நிகழ்ச்சிக்கு...

நேற்று முன்தினம் மாணவியின் தாயார் விமலா ராணிப்பேட்டையில் உறவினர் ஒருவர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டார். இதனால் இரவு வீட்டில் சிவசாஸ்திரி மற்றும் அவரது 2 மகள்கள் இருந்தனர். அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர்.

அப்போது சிவசாஸ்திரி தனது மூத்த மகளை அழைத்து அருகே இருக்கும் சித்தப்பா வீட்டுக்கு சென்று தூங்குமாறும், இங்கு நானும் தங்கையும் இருந்து கொள்கிறோம் என தெரிவித்துள்ளார். அதன்பேரில் மூத்த மகள் சித்தப்பா வீட்டுக்கு தூங்க சென்றார்.

கழுத்தை நெரித்து கொலை

பின்னர் சிவசாஸ்திரி விகாஷினியிடம் அந்த வாலிபரிடம் பேசுவதை தவிர்க்குமாறும், நீ நன்றாக படிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் மாணவி அந்த வாலிபரை தான் காதலிப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சிவசாஸ்திரி பெற்ற மகள் என்று கூட பாராமல் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

பின்னர் அவர் தனது சகோதரருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு மகளை கொன்று விட்டதாக கூறியுள்ளார். இதை கேட்டு அவர் பதறி அடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மாணவி இறந்த நிலையில் கிடந்துள்ளார். இருப்பினும் உயிர் இருக்கும் என்ற நம்பிக்கையில் அவரை வானூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், மாணவி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

போலீசில் சரண்

இதற்கிடையே சிவசாஸ்திரி தனது மகளை கொலை செய்து விட்டதாக கூறி வானூர் போலீசில் சரணடைந்தார். உடனடியாக போலீசார் மாணவியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக கனகசெட்டிக்குளம் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவசாஸ்திரியை கைது செய்தனர்.

காதலை கைவிட மறுத்ததால் பெற்ற மகளை தந்தையே கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் வானூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT