திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் பயின்று வரும் மாணவ-மாணவிகளுக்கு வழக்கமான சுகாதாரத் திட்டத்தின் கீழ் இரும்புச் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. இந்த மாத்திரைகளைச் சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே 6-ம் வகுப்பு படிக்கும் 10 மாணவர்களுக்குச் திடீரென கடுமையான வயிற்றுவலியும் வாந்தியும் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து உடனடியாகப் பள்ளிக் கூட நிர்வாகத்தின் மூலம் அந்த குழந்தைகள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் உள்ள மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் பதற்றமும் அச்சமும் நிலவியது.s
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் மருத்துவர்கள் குழுவினர் உடனடியாக முழுமையான பரிசோதனைகளை மேற்கொண்டனர். சோதனையின் முடிவில் மாணவர்களின் உடல்நிலையில் எந்தவிதமான ஆபத்தான பாதிப்புகளும் இல்லை என்று தெரியவந்ததை அடுத்து பெற்றோர் மற்றும் ஆசிரியர் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.