தமிழக கவர்னரை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் திருச்சி காஜாமலை வளாக பாரதிதாசன் பல்கலைக்கழகம் முன்பு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் அரவிந்த்சாமி தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.கே. மோகன், மாவட்ட தலைவர் சூரியா, புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் ஜனா, மாவட்ட தலைவர் சந்தோஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன தேடுதல் குழுவை தன்னிச்சையாக அறிவித்துள்ள கவர்னர் ஆர்.என். ரவியை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. இந்த நிலையில் கவர்னரின் உருவப்படத்தை எரிக்க முற்பட்டதால், போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து கவர்னரின் உருவப்படத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.