விழுப்புரம்,
மரக்காணம் அருகே அரசு பள்ளிக்கு ஆசிரியர்கள் வராததால் மாணவர்கள் வீடு திரும்பினர். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்திற்குட்பட்ட கந்தாடு ஊராட்சியில், அரசின் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 80-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜெய்னப் பீ மற்றும் 2 ஆசிரியர்கள் என மொத்தம் 3 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று 3 ஆசிரியர்களும் விடுப்பு எடுத்து பள்ளிக்கு வரவில்லை என கூறப்படுகிறது. அதே வேளையில் வழக்கம் போல் மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். சிலர், ஆட்டோவிலும் வந்து இறங்கினர். ஆசிரியர்கள் யாரும் வராததால் வகுப்பறைகளை கூட திறக்கவில்லை. இதனால் மாணவர்கள் காலை முதல் பள்ளி வளாகத்தில் வெளியிலேயே அமர்ந்திருந்தனர்.
அதே வேளையில் பள்ளியில் சமைக்கப்பட்ட மதிய உணவு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. சாப்பிட்டு முடிந்ததும், ஆசிரியர்கள் இல்லாததால் அனைத்து மாணவர்களும் பள்ளியில் இருந்து வீடுகளுக்கு திரும்பினர். பள்ளி நேரம் முடிவதற்குள் மதிய நேரத்திலேயே மாணவர்கள் வீட்டிற்கு திரும்பி வந்ததால் பெற்றோரும், அப்பகுதி பொதுமக்களும் குழப்பம் அடைந்தனர்.
இதுகுறித்து பெற்றோர்கள் விசாரித்தபோது, ஆசிரியர்கள் பள்ளிக்கு வராத காரணத்தால் தான் மாணவர்கள் வீட்டிற்கு வந்தனர் என்ற விவரம் தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமாக வட்டார கல்வி அலுவலர் கோவர்தனன் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது, 2 ஆசிரியர்கள் முறையான தகவல் அளிக்காமல் விடுமுறை எடுத்தது தெரியவந்துள்ளது. இது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் எவ்வித தகவலும் தெரிவிக்காமல் பள்ளிக்கு வராமல் இருந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெய்னப் பீ-யை பணியிடை நீக்கம் செய்து திண்டிவனம் கல்வி மாவட்ட தொடக்கப்பள்ளி கல்வி அலுவலர் செந்தில்குமார் உத்தரவிட் டுள்ளார். மேலும், உதவி ஆசிரியர் விஜயகுமாருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.