தமிழக செய்திகள்

ஆசிரியர்கள் கண்டித்ததால் ரத்த அழுத்த மாத்திரைகளை தின்று மயங்கிய மாணவிகள் - அரசு பள்ளியில் பரபரப்பு

ஒரே நேரத்தில் அதிக அளவில் மாத்திரைகளை உட்கொண்டதால் மாணவிகள் மயங்கி விழுந்தனர்.

திருவண்ணாமலை,

அரசு பெண்கள் பள்ளியில் ஆசிரியர்கள் கண்டித்ததால் 3 மாணவிகள் ரத்த அழுத்த மாத்திரைகளை தின்று மயங்கி விழுந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

மயங்கி விழுந்தனர்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள மேல் பள்ளிப்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 3 மாணவிகளை ஆசிரியர்கள் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த 3 மாணவிகளும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்தும் மாத்திரைகளை தின்றதாக கூறப்படுகிறது.

ஒரே நேரத்தில் அதிக அளவில் மாத்திரைகளை உட்கொண்டதால் அங்கேயே மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளி ஆசிரியர்கள், மாணவிகளை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்று அனுமதித்தனர்.

வாக்குவாதம்

பின்னர் இதுகுறித்து அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் திரண்டனர். மேலும் அவர்கள் ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்த 3 மாணவிகளில் பிளஸ் 2 மாணவி ஒருவர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.

பரபரப்பு

மாணவிகளுக்கு ரத்த அழுத்த மாத்திரை எங்கிருந்து கிடைத்தது? ஆசிரியர்கள் தனி அறையில் வைத்து கண்டித்தார்களா? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பெற்றோர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.