சென்னை,
சென்னையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். தூங்கும்போது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர். இந்த மாபாதக செயலை செய்த அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். தீவைத்த ஆசாமியை போலீசார் தேடுகிறார்கள்.
கொலை செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் பெயர் ராஜ் (வயது 58). இவர் சென்னை ஆயுதப்படை போலீசில் மோட்டார் வாகன பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். 1992-ம் ஆண்டு இவர் போலீஸ்காரராக பணியில் சேர்ந்தார். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இவர் செல்வராணி (32) என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.
தாமதமாக திருமணம் செய்தாலும், சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷமாகவே வாழ்ந்துள்ளார். நுங்கம்பாக்கம் லேக் ஏரியா 1-வது தெருவில் வாடகை வீட்டில் வாழ்ந்தனர். ஆனால் செல்வராணிக்கு 2-வது திருமணமாகும். அவர் தனது முதல் கணவரை பிரிந்து, ராஜை 2-வது திருமணம் செய்துள்ளார்.
திருமணம் நடந்தபோது செல்வராணிக்கு, அவரது முதல் கணவர் மூலம் மகள் இருந்தார். ராஜ் மூலம் ஒரு மகனும், மகளும் பிறந்தார்கள். தற்போது 2 மகள்களும், ஒரு மகனும் அவர்களுக்கு உள்ளனர். 3 பேரும் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கிறார்கள். மூத்த மகளுக்கு 16 வயதும், 2-வது மகனுக்கு 15 வய தும், 3-வது மகளுக்கு 14 வயதும் நிரம்பியுள்ளது.
நேற்று முன்தினம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ், மனைவி செல்வராணியோடு புரசைவாக்கத்தில் உள்ள ஒரு துணிக்கடையில், துணி வாங்கியுள்ளார். அதன்பிறகு வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு, வீட்டின் கீழ் அறையில் படுத்துத்தூங்கியுள்ளார். மேல் மாடியில் அவரது மனைவி இருந்ததாக தெரிகிறது. மாலை 4.15 மணியளவில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ் தூங்கிய அறையில் புகைமண்டலமாக இருந்தது.
உடனே செல்வராணி கீழே இறங்கி வந்துபார்த்தார். அப்போது அவர் கோர காட்சியை கண்டார். சப்-இன்ஸ்பெக்டர் ராஜ் உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்த நிலையில், இறந்து கிடந்தார். உடனே செல்வராணி கூச்சல்போட்டு கதறி அழுதார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் ராஜ் இறந்தது குறித்து நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக உதவி கமிஷனர் பொன்ராஜ், இன்ஸ்பெக்டர் ராமசுந்தரம் ஆகியோர் போலீஸ் படையுடன் விரைந்து வந்தனர். இறந்து கிடந்த சப்-இன்ஸ்பெக்டர் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். தடயஅறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து, விசாரணை நடத்தினார்கள்.
தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு செய்ததில், சப்-இன்ஸ்பெக்டர் ராஜ் உடலில் இருந்து பெட்ரோல் வாசனை வந்தது. அவர் இறந்துகிடந்த அறை முழுவதும் பெட்ரோல் வாசனை வீசியது. இதனால் இறப்பில் சந்தேகம் ஏற்பட்டது. அவரது மனைவி செல்வராணி கூறும்போது, சப்-இன்ஸ்பெக்டர் ராஜ் போக்சோ வழக்கு ஒன்றில் சிக்கியிருப்பதாகவும், அதனால் மனஉளைச்சலில் காணப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதனால் ஆரம்பகட்ட விசாரணையில், சப்-இன்ஸ்பெக்டர் ராஜ் பெட் ரோல் ஊற்றி தற்கொலை செய்து இறந்தாரா? என்ற கேள்வி தான் எழுந்தது. ஆனால் அவர் சாவதற்கு முன்பு, அவருடைய நடவடிக்கைகள் மனஉளைச்சலில் இருந்தது போன்று தெரியவில்லை. முந்தைய நாள் அவர் காளஹஸ்தி கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு வந்துள்ளார். இதனால் போலீசாருக்கு, சந்தேகம் இருந்தது. இதனால் அவரது மனைவியின் நடவடிக்கைகள் குறித்து அக்கம்பக்கத்தில் போலீசார் விசாரித்தனர். அவரது குழந்தைகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணையில், சப்-இன்ஸ்பெக்டர் ராஜீக்கும் அவரது மனைவி செல்வராணிக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந் துள்ளது. செல்வராணி நீண்ட நேரம் செல்போனில் பேசியபடி இருப்பாராம். இதை ராஜ் கண்டித்துள்ளார். ஒரு கட்டத்தில் செல்வராணியிடம் இருந்து செல்போனையும் பறித்துவிட்டதாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவிக்குள் ஒருவித புகைச்சல் இருந்துள்ளது. எது எப்படி இருந்தாலும் ராஜ், மனைவி செல்வராணி மீது மிகுந்த பாசம் காட்டிவந்துள்ளார்.
செல்வராணியை வக்கீலுக்கும் படிக்கவைத்துள்ளார். சமீபத் தில்தான் செல்வராணி வக்கீல் பட்டபடிப்பில் தேர்வாகியுள் ளார். போலீசாரின் சந்தேக விசாரணையில் அடுத்தடுத்து திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். கேமரா பதிவில் சம்பவம் நடந்தபோது ராஜின் வீட்டு முன்பு இருந்து மர்ம நபர் ஒருவர், மோட்டார் சைக்கிளில் ஏறி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.
அந்த நபர் யார் என்று விசாரித்தபோது, இந்த வழக்கில் அதிரடி திருப்புமுனை ஏற்பட்டது. மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் தேவா என்று தெரியவந்தது. அவரும் நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்தான். அவர் தற்போது தலைமறைவாகிவிட்டார். மேலும் செல்வராணியின் செல்போனை ஆய்வு செய்தபோது அதிலும் சில தகவல்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையின் போது, சப்-இன்ஸ்பெக்டர் ராஜ். தூங்கும்போது பெட்ரோல் ஊற்றி மிகவும் கொடூரமான முறையில் தீவைத்து எரித்து கொல்லப்பட்டது தெரியவந்தது. மனைவி செல்வராணியே இந்த கொடூர செயலுக்கு காரணமானதும் கண்டறியப்பட்டது.
கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டு செல்வராணியும் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். தன் மீது சந்தேகம் கொண்டு, தனது கணவர் தன்னை தினமும் அடித்து உதைத்து உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தி வந்ததாகவும், கடந்த 3 மாதங்களாக சித்ரவதையை தான் அனுபவித்ததாகவும், இதனால் அவரை தனக்கு தெரிந்த தேவா என்பவர் மூலம் தீர்த்துக்கட்டிவிட்டதாகவும் போலீஸ் விசாரணையில் செல்வராணி பரபரப்பு வாக்குமூலம் கொடுத்ததாகவும் தெரிகிறது.
'ராஜை கொலை செய்வதற்கு முன்பாக அவருக்கு தூக்க மாத்திரை கலந்த உணவு கொடுத்ததால் அவர் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தார். அதன்பின்னர் தேவா வந்து ராஜ் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததாகவும் செல்வராணி கூறியுள்ளார்'
கொலையாளி தேவாவுக்கும், செல்வராணிக்கும் இடையே உள்ள பழக்கம் எந்த வகையில் இருந்தது என்பது குறித்து போலீசார் அதிரடி விசாரணை நடத்தி வருகிறார்கள். செல்வராணிக்கும், கொலையாளி தேவாவுக்கும் தவறான உறவு இருந் ததா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடக்கிறது. அதுகுறித்து செல்வராணி முன்னுக்குபின் முரணான தகவல்களை தெரிவிப்பதாகவும் தொடர்ந்து விசாரணை நடப்பதாகவும் போலீசார் கூறினார்கள்.
தேவாவை தேடி வருவதாகவும், அவர் பிடிபட்டால்தான் இதுபற்றிய முழுவிவரமும் தெரியவரும் என்றும் போலீசார் மேலும் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ராஜ் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னை போலீஸ் வட்டாரத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.