தமிழக செய்திகள்

சப்-இன்ஸ்பெக்டர் தாயிடம் 15 பவுன் நகை பறிப்பு: பி.எச்.டி. மாணவர் கைது

விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே சி.பி.சி.ஐ.டி. சப்-இன்ஸ்பெக்டர் தாயின் வாயில் ஸ்டிக்கர் ஒட்டி 15 பவுன் பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடி பகுதியை சேர்ந்தவர் சாந்தி (வயது 59). இவர் செங்குறிச்சி அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் பிரசன்னா. இவர் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2-ந்தேதி மாலை சாந்தி பணி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் அவரிடம் பேசுவது போல் நடித்து, திடீரென வாயில் ஸ்டிக்கரை ஒட்டி, கழுத்தில் அணிந்திருந்த 15 பவுன் தாலி சங்கிலி மற்றும் செயின் ஆகியவற்றை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார்.

கைது

பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் சம்பவ இடத்தில் கிடைத்த சி.சி.டி.வி. காட்சிகள் மற்றும் செல்போன் டவர் அடிப்படையில் நகை பறிப்பில் ஈடுபட்டதாக, சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா பகல்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் மகன் அருண்குமார் (36) என்பவரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.

பறிமுதல்

விசாரணையில் அவர், சென்னை மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் 2-ம் ஆண்டு பி.எச்.டி. படித்து வருவது தெரியவந்தது. மேலும், அவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 ஆண் குழந்தைகள், 1 பெண் குழந்தை உள்பட 4 குழந்தைகள் உள்ளனர். சாந்தியிடம் நகைகளை பறித்து சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது. போதிய வருமானம் இல்லாத காரணத்தினால் நகை திருட்டில் ஈடுபட்டுள்ளதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

இதற்கிடையே கைது செய்யப்பட்ட அருண்குமாரிடம் 12 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT