சென்னை,
சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி. அருண் சுந்தர் தயாளன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
சுபமுகூர்த்த மற்றும் விசேஷ தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தற்போது ஆவணி மாதத்தில் வரும் கடைசி முகூர்த்த தினமான 17-ந்தேதி (இன்று) அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
எனவே, இன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும், அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களோடு ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களோடு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்களும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.