தமிழக செய்திகள்

பயறுவகைகள் பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்க ரூ. 25 லட்சம் வரை மானியம் - அமைச்சர் தகவல்

மாவட்ட வேளாண்மை துணை இயக்குநரை 12.06.2026-க்குள் அணுகி பயன்பெறுமாறு அமைச்சர் ர.வினோத் கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை,

"பயறு வகைகளில் தன்னிறைவுக்கான இயக்கத்தில்" பயறுவகைகள் பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்க ஆர்வமுள்ள, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்/தொகுப்பு அளவிலான கூட்டமைப்புகள்/தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள்/தனிநபர்கள் அதிகபட்சமாக 25 லட்சம் ரூபாய் வரை மானியம் பெறலாம் என வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் ர.வினோத் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ரூ. 25 லட்சம் வரை மானியம்

2025-26-உளுந்து, பாசிப்பயறு, துவரை மற்றும் காராமணி ஆகிய பயறுவகைப் பயிர்களின் உற்பத்தியைப் பெருக்கி, பயறு வகைகள் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திடும் நோக்கில் தமிழ்நாட்டில் வேளாண்மைத்துறையின் மூலம் மத்திய மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் "பயறு வகைகளில் தன்னிறைவுக்கான இயக்கம்" செயல்படுகிறது. உற்பத்தியாகும் பயறுவகைகளை மதிப்புக்கூட்டிட ஏதுவாக இத்திட்டத்தில் பயறுவகைகள் பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்க 33 சதவீத மானியமாக அதிகபட்சமாக 25 லட்சம் ரூபாய் வரை இந்த நிதியாண்டிலும் (2026–27) வழங்கப்பட உள்ளது.

செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், கரூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த,

பதப்படுத்தும் நிலையங்கள்

ஆர்வமுள்ள, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்/தொகுப்பு அளவிலான கூட்டமைப்புகள்/தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள்/தனிநபர்கள் ஆகியோர் இத்திட்டத்தில் பயறுவகைகள் பதப்படுத்தும் நிலையங்கள் அமைத்து பயன்பெற தகுதியுடையவர் ஆவார்கள். எனவே, தகுதியுள்ள பயனாளிகள் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநரை (வேளாண் வணிகம்) 12.06.2026-க்குள் அணுகி பயன்பெறுமாறு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT