தமிழக செய்திகள்

புறநகர் ரெயில்கள் ரத்து: தென்னக ரெயில்வே மெத்தனமாக செயல்படக்கூடாது - கனிமொழி எம்.பி.

புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மக்களும் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

சென்னை,

சென்னை கடற்கரை - தாம்பரம் தடத்தில் தினமும் 200க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் தினமும் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.

அலுவலக பணிக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிக்கு செல்வோர் என அனைத்து தரப்பு மக்களும் புறநகர் மின்சார ரெயில் போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இதனிடையே, எழும்பூர் ரெயில் நிலையத்த்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில் கடந்த 20ம் தேதி முதல் 40 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏப்ரல் 5ம் தேதி வரை 45 நாட்களுக்கு பெரும்பாலான புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

புறநகர் ரெயில்கள் பல ரத்து செய்யப்பட்டு, ரெயில்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதால் அலுவலகம் செல்வோர், கல்லூரி செல்வோர் என அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இதனிடையே இன்று 85க்கும் மேற்பட்ட புறநகர் ரெயில்களை தெற்கு ரெயில்வே ரத்து செய்துள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.

இந்நிலையில், தென்னக ரெயில்வே மெத்தனமாக செயல்படக்கூடாது என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

நாள்தோறும் லட்சக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் கடந்த சில நாட்களாக பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுவருவதும், அதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாவதும் வேதனையளிக்கிறது.

ஏற்கனவே 40 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றும் 49 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது, அன்றாடம் பணிக்குச் செல்வோர் தொடங்கி பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரை கடும் மனவுளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. குறிப்பாக வரும் வாரங்களில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில், தென்னக ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் இப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.