தமிழக செய்திகள்

“பாசிசத்திற்கு ‘வாலாட்டும்’ அப்படி ஒரு ராஜவிசுவாசம்” ஆ.ராசா விமர்சனம்

இந்தியா கூட்டணியில் அங்கம் வகிப்பதாகக் கூறப்படும் தவெக இந்தப் பேரணியில் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.

சென்னை,

“பாசிசத்திற்கு ‘வாலாட்டும்’ அப்படி ஒரு ராஜவிசுவாசம்” என திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா காட்டமான விமர்சனம் செய்துள்ளார்.

ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தியும் எஸ்ஐஆர் நடவடிக்கையைக் கண்டித்தும் டெல்லியில் இந்தியா கூட்டணி சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

நண்பகல் 12 மணியளவில் டெல்லியின் மிண்டோ சாலை - கோனாட் பிளேஸ் சந்திப்பில் தொடங்கி ராம்லீலா திடல் வரை பேரணி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ராம் லீலா திடலில் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்தியா கூட்டணியில் அங்கம் வகிப்பதாகக் கூறப்படும் தமிழக வெற்றிக் கழகம் இந்தப் பேரணியில் பங்கேற்கவில்லை.

இந்தநிலையில், இதுதொடர்பாக, திமுக எம்பி ஆ. ராசா தவெகவை விமர்சித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது:-

‘வாக்குத் திருட்டு' க்கு எதிராகத் தலைநகரில் களமாடும் இந்தியா கூட்டணியில் 'தொடை நடுங்கி' வெற்றிக் கழகம் தடம் பதிக்கவில்லை! பாசிசத்திற்கு 'வாலாட்டும்' அப்படி ஒரு ராஜவிசுவாசம்!!இருந்துவிட்டுப் போகட்டும்.

காலந்தோறும் மதச்சார்பின்மைக்கு 'காப்பிரைட்' கோரும் காங்கிரசுக்குமா சூனியமானது சுயமரியாதை?

பாவம் -காந்தியும் நேருவும்தான் கலங்கி நிற்கிறார்கள் என அதில் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT