தமிழக செய்திகள்

மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் திடீர் மூடல்

கலங்கரை விளக்கம் திடீரென மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள மாமல்லபுரமானது சிறந்த சுற்றுலா தலமாக திகழ்கிறது. இங்குள்ள புராதன சின்னங்களை பார்வையிட தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

மாமல்லபுரம் வரும் உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகளின் கண்களில் முதலில் படுவது, அங்குள்ள 100-ஆண்டிற்கு மேல் பழமையான பாரம்பரிய கலங்கரை விளக்கம்தான். இதன் மேல் ஏறி உச்சியில் நின்று, கடற்கரை நகரமான மாமல்லபுரத்தின் புராதன சின்னங்களான கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல் பாறை மற்றும் குடவரை கோவில்களின் அழகை வான்வழி பார்வையில் பார்த்து ரசிப்பார்கள்.

இந்த நிலையில் கலங்கரை விளக்கத்தின் பழங்காலத்து கட்டுமானத்தை பலப்படுத்த சீரமைப்பு பணிகள் இன்று முதல் தொடங்குகிறது. இதற்கான சாரம் கட்டும் பணிகள் முன்அறிவிப்பு இல்லாமல் திடீரென நேற்று நடந்தது. இதனால், கலங்கரை விளக்கத்தை பார்வையிட வந்த சுற்றுலா பயணிகளை மத்திய கப்பல் போக்குவரத்து துறை அலுவலர்கள் அனுமதிக்கவில்லை. இந்த பராமரிப்பு பணிகள் 2-வாரத்திற்கு நடைபெறுவதாக கூறப்படுகிறது.

முன் அறிவிப்பு இல்லாமல் திடீரென கலங்கரை விளக்கம் மூடப்பட்டதால் விடுமுறை நாளான நேற்று மாமல்லபுரம் வந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.

SCROLL FOR NEXT