Image credits: AI 
தமிழக செய்திகள்

சிமெண்ட் விலை திடீர் உயர்வு.. கட்டுமானத்துறையினர் அதிர்ச்சி

விலை தொடர்ந்து உயர்ந்தால், கட்டுமானப் பணிகளுக்கான மொத்த செலவும் மேலும் அதிகரிக்கும் என கட்டுமானத் துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.

சென்னை,

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கட்டுமானப் பணிகள் தற்காலிகமாகக் குறைந்துள்ளன. இதனால் சிமெண்ட் விற்பனை குறையக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு, உற்பத்தியாளர்கள் சிமெண்ட் விலையை உயர்த்தியுள்ளனர்.

மூட்டைக்கு ரூ.10 உயர்வு

கட்டுமானப் பணிகளுக்கு அத்தியாவசியமான மூலப்பொருளான சிமெண்ட் , மூட்டைக்கு ரூ.10 உயர்ந்துள்ளதாக கட்டுமானத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சில மாதங்களுக்கு முன்பு சிமெண்ட் விலை மூட்டைக்கு ரூ.330 என்ற அளவில் இருந்தது. வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட பிரச்சினைகளால் எரிபொருள் வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிமெண்ட் விலை மூட்டைக்கு ரூ.40 வரை உயர்ந்தது.அந்த நேரத்தில் கட்டுமானப் பணிகளுக்கான சிமெண்ட் தேவை அதிகமாக இருந்ததால், விலை உயர்வை மக்கள் ஏற்றுக்கொண்டனர். இதனிடையே, வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் ஓரளவு தணிந்ததைத் தொடர்ந்து, சில சிமெண்ட் உற்பத்தியாளர்கள் விலையைக் குறைக்கத் தொடங்கினர். இதனால், நாடு முழுவதும் சிமெண்ட் விலை மூட்டைக்கு ரூ.342 என்ற அளவுக்கு குறைந்தது.இந்நிலையில், தற்போது மீண்டும் சிமெண்ட் விலை மூட்டைக்கு ரூ.10 உயர்ந்துள்ளது.

பருவமழை காரணமாக விலை உயர்வு

இதுகுறித்து கட்டுமானத் துறையினர் கூறியதாவது:

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கட்டுமானப் பணிகள் தற்காலிகமாகக் குறைந்துள்ளன. இதனால் சிமெண்ட் விற்பனை குறையக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு, உற்பத்தியாளர்கள் சிமெண்ட் விலையை உயர்த்தியுள்ளனர். இதன் விளைவாக, தற்போது சிமெண்ட் விலை மூட்டைக்கு ரூ.10 அதிகரித்துள்ளது’ இவ்வாறு கட்டுமானத் துறையினர் தெரிவித்தனர்.

கட்டுமானத் துறையினர் கவலை

சிமெண்ட் விலை உயர்வு, ஏற்கனவே அதிகரித்துள்ள கட்டுமானச் செலவுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக, வீடு கட்டும் பொதுமக்கள் மற்றும் சிறிய அளவிலான கட்டுமானப் பணிகளை மேற்கொள்பவர்கள் இதனால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. விலை தொடர்ந்து உயர்ந்தால், கட்டுமானப் பணிகளுக்கான மொத்த செலவும் மேலும் அதிகரிக்கும் என கட்டுமானத் துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT