தமிழக செய்திகள்

திடீர் பழுது: நடு வழியில் நிறுத்தப்பட்ட குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில்

பிரேக்குக்கு செல்லும் குழாயில் ஏற்பட்ட கோளாறால், ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது.

திருச்சி,

கேரள மாநிலம் குருவாயூரில் இருந்து சென்னை நோக்கி குருவாயூர் விரைவு ரெயில் நேற்று புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தை கடந்து விட்டால் பின்பு திருச்சி மாவட்டம் மணப் பாறை ரெயில் நிலையத்தில் தான் நின்று செல்லும். இந்நிலையில் நேற்று மதியம் மணப்பாறையை அடுத்த கல்பட்டி ரெயில் நிலையம் அருகே அந்த ரெயில் சென்று கொண்டிருந்த போது திடீரென பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பிரேக்குக்கு செல்லும் குழாயில் ஏற்பட்ட கோளாறால் பிரேக் பழுதானதாக கூறப்படும் நிலையில், அந்த ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. வையம்பட்டியை அடுத்த கல்பட்டி ரெயில் நிலையத்தில் இருந்து சற்று தொலைவில் ரெயில் நிறுத்தப்பட்ட நிலையில், பழுதை சரிசெய்யும் பணி நடைபெற்றது. சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த பணி நிறைவு பெற்ற பின்னர் அந்த ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.