நாகர்கோவில்,
கேரளம் மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியபோது குமரி மாவட்டத்திலும் மழை பெய்தது. மாவட்டத்தில் பரவலாக அனைத்து இடங்களிலும் தொடர்ந்து மழை பெய்ததால் பல நாட்கள் குளுகுளு சீசன் நிலவியது. ஆனால் ஒரு வார காலமே அந்த சீதோஷ்ண நிலை இருந்தது. அதன்பிறகு பகல் நேரத்தில் வெயில் அடிக்கத் தொடங்கியது. குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைத்தது. பகல் நேரம் மட்டுமின்றி, மாலை 4 மணி வரையிலும் மக்கள் வெளியே சென்று வர முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது.
இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இன்று மழை பெய்தது. காலையில் 8 மணி வரை வெயில் அடித்து வந்த நிலையில் திடீரென பல இடங்களில் மழை பெய்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
நாகர்கோவில் மாநகரைப் பொறுத்தவரை, காலை 7 மணி முதல் 9 மணி வரை வெயில் கடுமையாக அடித்தது. ஆனால் 9 மணிக்குப் பிறகு மேக மூட்டங்கள் திரளத் தொடங்கியது. காலை 11 மணியளவில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. வேப்பமூடு, கோட்டாறு, பார்வதிபுரம், வெட்டூர்ணிமடம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ததால் சாலையில் பொதுமக்கள் குடை பிடித்தபடி நடந்து சென்றனர். திடீரென மழை பெய்ததால் பல இருசக்கர வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடியே வாகனத்தில் சென்றனர்.
இதேபோல் மாவட்டத்தில் தக்கலை, கீரிப்பாறை, வடிவீஸ்வரம், கோணம் மற்றும் சுசீந்திரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் அடித்து வந்த நிலையில், இன்று பெய்த திடீர் மழையால் குளிர்ச்சியான தட்பவெப்பநிலை நிலவியது. இதனால் மக்கள் நிம்மதியடைந்தனர்.