தமிழக செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரிசனத்துக்கு திடீர் நேரக்கட்டுப்பாடு: பக்தர்கள் அதிர்ச்சி

திருச்செந்தூர் முருகன் கோவில் நுழைவு வாயில் வழியாக கட்டண தரிசனத்திற்கு இனிமேல் மாலை 6.30 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரிசனத்துக்கு திடீர் நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

திருச்செந்தூர் கோவில்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு திடீரென நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தற்போது பின்பற்றப்பட்டு வரும் வழக்கத்தின்படி, இரவு 9 மணிக்கு நடை சாற்றப்பட வேண்டும். பக்தர்கள் அதிகளவில் வருகை தரும் நாட்களில், கட்டண தரிசன வரிசையில் மாலை 6.30 மணிக்கு பின்னரும், பொது தரிசன வரிசையில் இரவு 7 மணிக்கு பின்னரும் பக்தர்கள் தொடர்ந்து அனுமதிக்கப்படுவதால், சாமி தரிசனம் செய்து முடித்த பின்னர் நடை சாற்றுவதற்கு நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஆகிவிடுகிறது.

நேரக்கட்டுப்பாடு

கோவிலின் நடை இரவு 9 மணிக்கு சாற்றப்படும் என அறிவிப்பு பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளதால், இரவு 9 மணி வரை கோவில் கிரிப்பிரகாரங்களில் காத்திருக்கும் பக்தர்கள் தங்களையும் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கக்கோரி அவ்வப்போது வாக்குவாதங்களில் ஈடுபடும் சூழ்நிலையும் ஏற்படுகிறது. எனவே, பக்தர்களுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கோவில் நுழைவு வாயில் வழியாக கட்டண தரிசனத்திற்கு இனிமேல் மாலை 6.30 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்றும், பொது தரிசனத்திற்கு இரவு 7 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் விசேஷ மற்றும் விடுமுறை நாட்களில் தரிசன நேரம் மாறுதலுக்கு உட்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நோக்கம் என்ன?

உண்மையில், இதன் நோக்கம், கூட்ட நெரிசலான நாட்களில் கட்டண தரிசன வரிசையில் மாலை 6.30 மணியளவிலும், பொது தரிசன வரிசையில் இரவு 7 மணியளவிலும் உள்நுழையும் பக்தர்கள், இரவுநேர அபிஷேகத்தின்போது கருவறை திரையிடப்படுவதால் ஏற்படும் தாமதத்தை கடந்து தரிசனம் செய்வார்கள். அவர்கள் தரிசனம் முடிந்து திரும்புவதற்கு குறைந்தபட்சம் இரவு 9 மணி ஆகிவிடும் என்பதையும், அதன் பின்னரே பள்ளியறை பூஜை நடைபெற்று கோவிலின் நடையை திருக்காப்பிட இயலும் என்பதையும் கருத்தில் கொண்டுதான் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே, தரிசன வரிசைகளில் பக்தர்களின் உள்நுழைவை முறைப்படுத்துவதற்கான நிர்வாக நடைமுறை குறித்து பக்தர்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பக்தர்கள் அதிர்ச்சி

திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.