தமிழக செய்திகள்

கோடை விடுமுறை: தமிழகம் முழுவதும் 835 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

சிறப்பு பேருந்துகள் கூட்ட நெரிசலின்றி பயணிக்க உதவும் என போக்குவரத்து துறையினர் தெரிவித்தனர்.

சென்னை,

கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு, தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு 835 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் கூட்ட நெரிசலின்றி நிம்மதியாகப் பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, சேலம் உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு நாளை (ஏப்ரல் 17) 295 பேருந்துகளும், நாளை மறுதினம் (ஏப்ரல் 18) 310 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்பட உள்ளன.

அதேபோல், சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, பெங்களூரு போன்ற இடங்களுக்கு இரண்டு நாட்களில் தலா 55 பேருந்துகள் இயக்கப்படும். மாதாவரம் பேருந்து நிலையத்திலிருந்து 20 சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையைத் தவிர்த்து பெங்களூரு, கோவை, ஈரோடு போன்ற நகரங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

வரும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை முடிந்து பயணிகள் மீண்டும் சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக, அனைத்து ஊர்களிலிருந்தும் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகளை இயக்கவும் போக்குவரத்துத்துறை ஏற்பாடு செய்துள்ளது. கோடை வெயில் மற்றும் விடுமுறை காலத்தைக் கருத்தில்கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இதே போன்று தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேர்தல் நெருங்கி வருவதாலும், கோடை விடுமுறை தொடங்கியுள்ளதாலும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். சிறப்பு பேருந்துகள் கூட்ட நெரிசலின்றி பயணிக்க உதவும் என போக்குவரத்து துறையினர் தெரிவித்தனர்.