தமிழக செய்திகள்

கொலை மிரட்டல் வழக்கில் சம்மன்: விசாரணைக்கு இன்று ஆஜராவாரா சேகர்பாபு?

அன்பில் மகேஷ் கைதின்போது போலீசாரிடம் சேகர்பாபு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

சென்னை,

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரூ.400 கோடி ஊழல் வழக்கில், கடந்த திங்கட்கிழமையன்று கைது செய்யப்பட்டார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கமிஷனர் அலுவலகத்துக்கு வெளியில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, தி.மு.க. எம்.பி. கலாநிதி வீராசாமி உள்ளிட்ட ஏராளமான தி.மு.க. தொண்டர்கள் காத்திருந்தனர்.

அப்போது போலீசாரிடம், சேகர்பாபு, கலாநிதி வீராசாமி ஆகியோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இதையொட்டி சேகர்பாபு மீதும், கலாநிதி வீராசாமி மீதும் வேப்பேரி போலீசார் கொலை மிரட்டல் மற்றும் போலீசாரை பணிசெய்ய விடாமல் தடுத்தல் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில், விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு, சேகர்பாபுவுக்கு வேப்பேரி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அந்த சம்மன் அடிப்படையில், சேகர்பாபு இன்று (வெள்ளிக்கிழமை) வேப்பேரி போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகவேண்டும். ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராவாரா? அல்லது கால அவகாசம் கேட்பாரா? என்பது தெரியவில்லை.

SCROLL FOR NEXT