சென்னை,
சென்னை கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணி புரிந்தவர் நந்தினி. இவர், நேற்றுமுன்தினம் சேத்துப்பட்டு மேயர் ராமநாதன் சாலையில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கினார். அப்போது அவர் சாக்லெட் உள்ளிட்ட பொருட்களை திருடியபோது கையும் களவுமாக சிக்கினார்.
அவர் திருடிய காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. முதலில் மறுத்தாலும், பின்னர் திருடியதை ஒப்புக்கொண்டு நந்தினி, கடை ஊழியர்களிடம் அதுகுறித்து எழுதிக் கொடுத்தார். இதைத்தொடர்ந்து நந்தினியின் கணவர் சிலருடன் சூப்பர் மார்க்கெட்டுக்கு வந்து அங்குள்ள ஊழியர்களை அடித்து தாக்கி பொருட்களை சேதப்படுத்தினார்.
இதுதொடர்பாக எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண் போலீஸ் நந்தினியின் கணவர் தினேஷ் என்பவரை கைது செய்தனர். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் திருட்டு புகாரில் சிக்கிய பெண் போலீஸ் நந்தினியை பணியிடை நீக்கம் செய்து கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் ராஜேந்திரன் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.