தமிழக செய்திகள்

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவக் கல்வி - 50 சதவீத இடஒதுக்கீடு பறிபோகும் ஆபத்து! - எஸ்டிபிஐ

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வீரியமாகப் போராட வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.

சென்னை,

தமிழகத்தின் உரிமையையும், ஏழை மக்களின் பொது சுகாதாரத்தையும் காக்க உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வீரியமாகப் போராட எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் அச.உமர் பாரூக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மருத்துவர்கள் கவலை

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் வெறும் கட்டிடங்கள் அல்ல; அவை பல கோடி ஏழை, எளிய மக்களின் உயிரைக் காக்கும் உன்னத இடங்கள் ஆகும். இருதய அறுவை சிகிச்சை, நரம்பியல், சிறுநீரகம், குழந்தை மருத்துவ அறுவை சிகிச்சை போன்ற மிக முக்கியமான, உயர்தர மருத்துவப் படிப்புகளில் (Super Speciality), தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கென 50% உள் இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் நீண்ட சட்டப் போராட்டம் நடத்திப் பெற்ற இந்த உரிமை, இன்று தமிழக அரசின் மெத்தனப்போக்கால் பறிபோகும் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு தமிழக அரசு மருத்துவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 215 இடங்களில், கடுமையான தகுதி மதிப்பெண் (Cut-off) நிபந்தனைகளால் தற்போது வரை 74 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள காலியிடங்களை மத்திய அரசின் ‘அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு’ (All India Quota) தாரை வார்ப்பதற்கான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன.

தவறான அணுகுமுறை

வழக்கமாக இது போன்ற சூழல்களில் தகுதி மதிப்பெண்ணைக் குறைத்து, முதலில் தமிழக மருத்துவர்களைக் கொண்டுதான் இந்த இடங்களை நிரப்ப வேண்டும். ஆனால், தமிழக அரசின் பலவீனமான வாதத்தாலும், தவறான அணுகுமுறையாலும் நமது மாநில இடங்கள் வெளிமாநிலத்தவருக்குச் செல்லும் அவல நிலை உருவாகியுள்ளது.

இந்தக் காலி இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டிற்குத் தாரை வார்ப்பது ஏழை, எளிய பொதுமக்களைக் கடுமையாகப் பாதிக்கும். இதனால் அரசு மருத்துவமனைகளில் உயிர்காக்கும் உயர் சிகிச்சை நிபுணர்களின் எண்ணிக்கை பெருமளவு குறையும். இதன் விளைவாக, சிக்கலான மற்றும் உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு ஏழை நோயாளிகள் தங்களின் வாழ்நாள் சேமிப்பை இழந்து, தனியார் மருத்துவமனைகளை நாட வேண்டிய கட்டாயம் ஏற்படும். இது தமிழக பொது சுகாதாரத் துறையையே ஒட்டுமொத்தமாக முடக்கிவிடும் அபாயம் உள்ளது.

போர்க்கால அடிப்படையில்

அகில இந்திய ஒதுக்கீட்டில் மத்திய அரசு தகுதி மதிப்பெண்களைக் குறைக்கும் போதெல்லாம், அதே சலுகையைத் தமிழக அரசு மருத்துவர்களுக்கும் நீட்டித்து, காலி இடங்களை நமது மாநில மருத்துவர்களுக்கே வழங்க வேண்டும். கடந்த காலங்களைப் போல உச்ச நீதிமன்றத்தில் வலுவான, வீரியமிக்க சட்டப் போராட்டத்தை நடத்தி தமிழகத்தின் உரிமையையும், ஏழை மக்களின் பொது சுகாதாரத்தையும் தமிழக அரசு உடனே பாதுகாக்க வேண்டும்.

ஆகவே, தமிழக மருத்துவர்களின் உரிமையையும், ஏழை எளிய மக்களின் இலவச உயர் சிகிச்சைக்கான உரிமையையும் நிலைநாட்ட, சட்டப் போராட்டம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்