சென்னை,
ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் ரொகையா ஷேக் முகமது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தனியார் தொலைக்காட்சியில், திமுக தலைமையில் இருக்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தான் மதிமுக இன்று வரை இருக்கிறது எனத் தெளிவாகச் சொல்கிறார். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு 28 தொகுதிகள் மற்றும் ராஜ்யசபா உறுப்பினர் பதவி வேண்டும், இல்லாவிட்டால் தவெகவுடன் கூட்டணி வைத்துவிடுவோம் என்று காங்கிரஸ் கட்சி உங்களை மிரட்டிய போது அதற்கு அடிபணிந்து 28 தொகுதிகளைக் கொடுத்தது திமுக. திடீர் உப்புமா மாதிரி தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு கூட்டணியில் இணைந்த தேமுதிகவுக்கு 10 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா கொடுத்து, 9 வருடங்களாகப் பயணித்த மற்ற கட்சிகளை மனவருத்தமடைய வைத்தது திமுக.
விசிகவுக்கு எட்டு தொகுதிகளில் பானை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு தந்தீர்கள். இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு அவர்களது சின்னத்தில் போட்டியிட அனுமதித்தீர்கள். ஸ்டாலின் தான் மீண்டும் முதலமைச்சர் ஆவார் எனத் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்த மதிமுக மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை. வெறும் 4 தொகுதிகள் கொடுத்து அதுவும் தனிச் சின்னத்தில் நிற்க அனுமதிக்கவில்லை.
தேர்தல் முடிவுகள் நமக்கு அதிர்ச்சியைத் தந்தன அதுவும் அண்ணன் ஸ்டாலின் அவர்களின் தோல்விக்கு உண்மையிலேயே நாங்கள் வருந்துகிறோம். திருச்சியில் பலர் வெற்றி வாய்ப்பை இழந்தனர். ஆனால், கடந்த 5 ஆண்டுகளாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகச் செயல்பட்ட சகோதரர் மகேஷ் பொய்யாமொழியின் தோல்வி எனக்கு வருத்தமாக இருக்கிறது. இதற்கு மேல் ஒரு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் எப்படிச் செயல்பட முடியும் என்று தெரியவில்லை.
தவெக ஆட்சி அமைக்க, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இருந்த சில கட்சிகள் இணைந்து ஆட்சி அமைத்தது தவிர்க்க இயலாதது. தேர்தல் முடிவுகளுக்குப் பின் மதிமுக எப்பொழுதும் போல் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால், கூட்டணியில் இருந்து வெளியில் போனவர்களை விட்டுவிட்டு, உங்களுடன் இப்பொழுதும் பயணிக்கிறோம் என்று சொல்லும் மதிமுக தலைமையை, திமுகவில் இணையத்தில் இயங்கும் சிலர் மதிமுகவினரை குறிப்பாக வைகோ அவர்களை மிகத் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வது அயோக்கியத்தனம்.
திமுகவை முதுகிலும் நெஞ்சிலும், வலதுபுறமும் இடதுபுறமும் குத்தியவர்களைக் கண்டுகொள்ளாமல், இந்த அசாதாரணமான சூழ்நிலையில் அமைதியாக உங்களுடன் இருக்கும் எங்கள் தலைவர் வைகோ அவர்களைக் கேலிச்சித்திரம் செய்யும் சில திமுகவினர்கள் இனியாவது திருந்த வேண்டும். இல்லையெனில் யாராவது வந்து மீண்டும் உங்களைத் திருத்துவார்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.