சமாஜ்வாதி கட்சியில் முலாயம் சிங் யாதவ் தலைவராக இருந்த போது தமிழ் மாநில துணைத்தலைவராக இருந்தவர் சுப.சிவபெருமாள் யாதவ். இவர் தற்போதைய தலைவர் அகிலேஷ் யாதவுக்கு எதிராக தமிழ் மாநில சமாஜ்வாதி கட்சி என்ற புதிய கட்சியை திருச்சியில் நேற்று தொடங்கினார். அத்துடன் கட்சி கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார். இதில் மாநிலச்செயலாளர் முத்து ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து சுப.சிவபெருமாள் நிருபர்களிடம் கூறும்போது, முலாயம் சிங் யாதவ் தமிழக மக்கள் மீது பாசம் வைத்திருந்தார். சுனாமியால் தமிழகம் பாதிக்கப்பட்ட போது ரூ.5 கோடி நிதி வழங்கினார். ஆனால் தற்போது அகிலேஷ் யாதவ் தமிழகத்தை கண்டு கொள்ளவில்லை. ஆகவே புதிய கட்சியை தொடங்கி இருக்கிறோம். மாநிலம் முழுவதும் இருக்கும் முலாயம் சிங் ஆதரவாளர்களை ஒன்று திரட்ட இருக்கிறோம். தமிழக அரசு யாதவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. அழகு முத்துக்கோன் வரலாற்றை மறைக்க பார்க்கிறார்கள். இந்தியாவில் தமிழ்நாடு இருப்பது உண்மையானால் தமிழக அரசு பள்ளிகளில் இந்தியை இலவச விருப்ப பாடமாக அறிவிக்க வேண்டும். வருகிற நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் தமிழ் மாநில சமாஜ்வாதி கட்சி தனித்து போட்டியிடும். எங்களுக்கு யாதவர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களிடம் நல்ல ஆதரவு உள்ளது என்றார்.