சென்னை திருவான்மியூரை சேர்ந்தவர் சூர்யநாராயணன் (வயது 73). இவரது மகள் விஷ்ணுபிரியா துணை நடிகை. ‘மாயாவி’ படத்தில் மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இவரது கணவர் ரமேஷ் கிருஷ்ணா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தனது மனநலம் பாதிக்கப்பட்ட கணவரை பராமரித்து வந்தார். கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில் பின்புறம் சூர்யநாராயணனுக்கு சொந்தமான பங்களா உள்ளது. அங்கு தனது கணவர் ரமேஷ் கிருஷ்ணாவை சிகிச்சைக்காக வைத்து பராமரித்து வந்தார். கடந்த 2018ஆம் ஆண்டு கொடைக்கானல் வந்த விஷ்ணுபிரியாவுக்கு கார் டிரைவர் பிரபாகரனுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. இதுகுறித்து தனது தந்தை சூர்யநாராயணனிடம் விஷ்ணுபிரியா தெரிவித்தார். இந்த நிலையில் பிரபாகரன் கூலிப்படையால் கொல்லப்பட்டார்.சூர்யநாராயணன்தான் கூலிப்படையை ஏவி பிரபாகரனை கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வழக்கு நடந்து வந்த நிலையில் சூர்யநாராயணன் தலைமறைவானார்.
இந்த நிலையில் கொடைக்கானலில் உள்ள தனது பங்களாவுக்கு சூர்யநாராயணன் வந்துள்ளார். அங்கு அவருக்கு துணையாக பாம்பார்புரத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் இருந்துள்ளார். இன்று அதிகாலை பங்களாவில் புகுந்த மர்ம கும்பல் ஆறுமுகத்தை தாக்கி கட்டிப்போட்டனர். மேலும் சூர்யநாராயணனை சேரில் அமரவைத்து முகம் முழுவதும் பிளாஸ்டர் ஒட்டி மூடியுள்ளனர். இதனால் மூச்சுவிட முடியாமல் திணறிய சூர்யநாராயணனின் முகத்தை மேலும் அமுக்கியதால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை உறுதி செய்துகொண்ட கும்பல் தப்பி ஓடியது. இன்று காலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இதைப் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து சூர்யநாராயணனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
காயமடைந்த ஆறுமுகம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.நடிகை விஷ்ணுபிரியாவின் காதலன் பிரபாகரன் கொல்லப்பட்டதிலிருந்து சூர்யநாராயணன் தலைமறைவாகவே இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் கொடைக்கானல் வந்ததை அறிந்த மர்ம கும்பல் வீட்டை வெகுநேரம் நோட்டமிட்டு கொலை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். எனவே பிரபாகரனின் ஆதரவாளர்கள் அவரது கொலைக்கு பழிக்குப்பழியாக சூர்யநாராயணனை கொன்றனரா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் துணை நடிகை விஷ்ணுபிரியா எங்கு உள்ளார் என தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கொடைக்கானலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.