சென்னை
தமிழக அரசின் பதவிக்காலம் மே மாதம் 10-ந்தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், தமிழக சட்டசபைக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 15-ந்தேதி அறிவித்தது. இதன்படி, ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. இதில், த.வெ.க. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து உள்ளது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும், அ.தி.மு.க. தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியும் போட்டியிட்டன.
இவை தவிர, நாம் தமிழர் மற்றும் த.வெ.க. ஆகிய இரண்டு கட்சிகளும் தேர்தலை தனித்து எதிர்கொண்டன. இதில், தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம் பிடித்து, தேர்தலை எதிர்கொண்ட காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. த.வெ.க. பெரும்பான்மை பெற சில தொகுதிகள் தேவையாக உள்ளன. இதனால், பெரும்பான்மை பெற சில கட்சிகளின் ஆதரவை கோர கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, தேர்தல் கூட்டணி அமைவதற்கு முன்பு த.வெ.க.வுடன் காங்கிரஸ் கைகோர்க்கும் என கூறப்பட்டது. இந்நிலையில், த.வெ.க.வுக்கு பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை காங்கிரஸ் அளிக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த சூழலில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் இன்று கூறும்போது, காங்கிரஸ் தலைமையிடம் அறிக்கை ஒன்றை அளித்து இருக்கிறேன். அவர்கள் தமிழக விவகாரம் பற்றி முடிவெடுப்பார்கள் என கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து கூறும்போது, தமிழக மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்து இருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிடும்படியாக இளைஞர்களும், பெண்களும் த.வெ.க.வுக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளனர். அதனால், பெரும் எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளனர்.
இதுதொடர்பாக, ஏற்கனவே நான் காங்கிரஸ் தலைவர் கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் கட்சியின் அமைப்பு பொது செயலாளர் வேணுகோபால் ஆகியோருக்கு அறிக்கை ஒன்றை அனுப்பி விட்டேன். அவர்கள் அனைவரும் தமிழகத்தில் என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுப்பார்கள் என்று கூறியுள்ளார்.