தூத்துக்குடி,
தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில், திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
சுதந்திர தின விடுமுறை மற்றும் வார விடுமுறை இணைந்து வருவதால், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இன்று திருச்செந்தூருக்கு வருகை தந்துள்ளனர். பொது தரிசன பாதையில் நீண்ட வரிசையில் சுமார் 7 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதே போல் முடி காணிக்கை செலுத்தவும், நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடவும் சுமார் 2 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருக்கின்றனர்.
பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் திருச்செந்தூர் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் களைகட்டியுள்ளன. மேலும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் திருச்செந்தூர் நகர் பகுதிக்கு வந்ததால் அங்கு போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது.