சென்னை,
சென்னை புறநகர் பகுதியான கும்மிடிப்பூண்டி, தலைநகர் டெல்லியையே பின்னுக்கு தள்ளி, நாட்டின் மிகவும் மாசுபட்ட நகரமாக மாறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவிலேயே காற்று மாசுபாட்டிற்கு பெயர் போன டெல்லியில், நேற்று காற்றின் தர குறியீடு 265 ஆக மட்டுமே பதிவாகியிருந்தது. ஆனால், சென்னையின் முக்கிய தொழில்துறை நகரமான கும்மிடிப்பூண்டியில் நேற்று காற்றின் தர குறியீடு 342 ஆக பதிவாகி, நாட்டிலேயே முதலிடத்தை பிடித்துள்ளது.
குறிப்பாக நேற்று மாலை 5.05 மணியளவில் இது 346 என்ற உச்சத்தை தொட்டு, 'மிகவும் மோசமான' பிரிவுக்கு சரிந்தது. நேற்று சென்னையின் காற்றின் தர குறியீடு 224 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, கடந்த மூன்று நாட்களாக கும்மிடிப்பூண்டியில் காற்றின் தரம் தொடர்ந்து சரிந்து வருகிறது:
• நவம்பர் 19: 305
• நவம்பர் 20: 321
• நவம்பர் 21 (நேற்று): 342
301 முதல் 400 வரையிலான காற்றின் தரக் குறியீடு 'மிகவும் மோசமானது' என வகைப்படுத்தப்படுகிறது.
தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுப்புகை மற்றும் எரிபொருள் எரிதல். கனரக சரக்கு வாகனங்களின் போக்குவரத்து. சாலைகளில் பறக்கும் தூசி மற்றும் கட்டுமான பணிகள்.
இதுகுறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "காற்றின் திசை மற்றும் வளிமண்டல மாற்றங்களால், மற்ற நகர்ப்புற மற்றும் தொழிற்சாலை பகுதிகளில் இருந்து வரும் மாசடைந்த காற்று கும்மிடிப்பூண்டியில் வந்து சேர்கிறது. மேலும், காற்றின் வேகம் குறைவாக இருப்பதால், மாசுத் துகள்கள் கலைந்து செல்லாமல் வளிமண்டலத்திலேயே தங்கிவிடுகின்றன" என தெரிவித்துள்ளார்.
கும்மிடிப்பூண்டி காற்றில் கலந்துள்ள நுண்ணிய 'பிஎம்2.5' நச்சுத்துகள்கள், மனிதர்களின் நுரையீரலின் ஆழம் வரை ஊடுருவக்கூடியவை. இந்த காற்றை நீண்ட நேரம் சுவாசிப்பதால், கடுமையான சுவாச கோளாறுகள் மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.