தமிழக செய்திகள்

இன்ஸ்டாகிராமை அதிகநேரம் பயன்படுத்தியதால் சந்தேகம்: வீடு புகுந்து கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து

போலீசார் வழக்குப்பதிவு செய்து தலை மறைவாக உள்ள காதலனை தீவிரமாக தேடி வருகின்றனர்

திருப்பூர்,

இன்ஸ்டாகிராமை அதிகநேரம் பயன்படுத்தியதால் சந்தேகப்பட்டு, வீடு புகுந்து கல்லூரி மாணவியை அவரது காதலன் கத்தியால் குத்தினார்.

கல்லூரியில் மலர்ந்த காதல்

திருப்பூர் சாமுண்டிபுரத்தைச் சேர்ந்த 17 வயது இளம்பெண், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இதே கல்லூரியில், திருப்பூர் சந்திராபுரத்தைச் சேர்ந்த 17 வயது மாணவரும் படித்து வருகிறார். இவர்கள் இருவரும் ஒரே கல்லூரி என்பதால் காதல் மலர்ந்தது. மேலும் தினமும் நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்தனர்.

இந்த நிலையில் அந்த மாணவி அதிக நேரம் இன்ஸ்டாகிராம் பயன்படுத் தியதால், அவர் மீது காதலனுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அப்போது, நீ என்னை தவிர யாரிடமும் பேசக்கூடாது, இன்ஸ்டாகிராமையும் பயன்படுத்தக்கூடாது என்று மாணவிக்கு, காதலன் தடைப்போட்டார். இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று மாணவியைச் சந்திப்பதற்காக அவருடைய வீட்டுக்குச் சென்ற காதலன், மாணவியின் செல்போனை வாங்கி இன்ஸ்டாகிராமில் யாருடன் பேசி உள்ளார் என்று பார்த்தார். இதனால் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த காதலன், ஏற்கனவே தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கல்லூரி மாணவியை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த மாணவி ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். இதையடுத்து காதலன் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

போலீஸ் வலைவீச்சு

இதற்கிடையே மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலை மறைவாக உள்ள காதலனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT