புதுடெல்லி,
சவுதி ரியாத் விமான நிலையம் அருகில் அண்மையில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை நடத்தினர். இதில் பலர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். நிலைமை சுமூகமாக இல்லாத நிலை எழுந்ததால் சவுதி அரேபியாவில் விமான சேவைகளையும் ரத்து செய்து இந்திய விமான நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டன.
ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள், சவுதி அரேபியாவின் ரியாத் மற்றும் தம்மாம் நகரங்களுக்கான சேவைகளை நவம்பர் 7 வரையிலும், ஜித்தாவுக்கான விமானச் சேவையை அக்டோபர் 31 வரையிலும் ரத்து செய்தன. இந்த நிலையில், சவுதி அரேபிய நகரங்களை இணைக்கும் தங்களது விமானச் சேவைகளை ரத்து செய்ததை நவம்பர் 14 -ந்தேதி வரை நீட்டிப்பதாக ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இன்று அறிவித்துள்ளன. பயணிகள் அதற்கேற்ப தங்களது பயணங்களை திட்டமிட்டுக் கொள்ளும்படி இரு விமான நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.
இண்டிகோ மற்றும் அகாசா ஏர் நிறுவனங்களும் சவுதி அரேபியாவுக்கான தங்களது விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.