தமிழக செய்திகள்

நடத்தையில் சந்தேகம்.. சுத்தியலால் அடித்து பெண்ணை கொன்ற கொடூர கணவர்

பெண்ணின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக கணவர் அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்தாக கூறப்படுகிறது.

ராமநாதபுரம்,

நடத்தையில் சந்தேகத்தால் சுத்தியலால் அடித்து பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2-வது கணவரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

நடத்தையில் சந்தேகம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் பழனி(வயது 50). கட்டிட தொழிலாளி. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்தவர் ராணி (47). இவர் பூக்கள் கட்டி விற்றும், கட்டிட வேலைக்கு சென்றும் வந்தார். இவருக்கும் திருமணமாகி மகள்கள், மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் பழனிக்கும், ராணிக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக திருவள்ளுவர் நகரில் கணவன், மனைவியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே ராணியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக பழனி அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்தாராம். நேற்று முன்தினம் இரவு மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

சுத்தியலால் அடித்துக்கொலை

அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த பழனி வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து மனைவி ராணியின் தலை மற்றும் முகத்தில் தாக்கி உள்ளார். இதில் முகம் சிதைந்து சம்பவ இடத்திலேயே ராணி பரிதாபமாக இறந்தார். பின்னர் பழனி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

நேற்று காலை ராணியின் மகள் அவரை பார்ப்பதற்காக வீட்டுக்கு வந்தார். அங்கு ராணி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் பரமக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். ராணியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனியை தேடி வருகின்றனர். இந்த பயங்கர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.